பக்கம்:மணி பல்லவம் 5.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

910

மணிபல்லவம்

"அப்படியானால் என்னோடு என் வழியில் புறப்படு.”

“இதோ புறப்படுகிறேன்” - என்று சொல்லியபடியே பெருமாளிகையின் வாயிற்படியருகே போய்த் தன் உடலின் பல பகுதிகளைப் பிணைத்துக் கொண்டிருந்த பொன் சுமைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அந்தப் படியில் குவித்தாள் சுரமஞ்சரி. இறுதியாகக் கால்களின் மாணிக்கச் சிலம்புகளையும் கழற்றி வைத்துவிட்டு அவற்றைப் பற்றிய மனத்தின் ஆசைகளும் அறவே கழன்று போய் அவள் எழுந்து புறப்படுவதற்காக நிமிர்ந்தபோது அவளுடைய முன் நெற்றியில் மேலேயிருந்த கண்ணீர் வெதுவெதுப்பாகச் சிந்திச் சிதறியது.

திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி. அவள் அந்த அணிகலன்களையெல்லாம் கழற்றி வைத்த படிக்கு ஒருபடி மேலே அவளுடைய தந்தை கண்கலங்கி நீர் பெருக வந்து நின்றுகொண்டிருந்தார்.

“இப்படித் தோற்றுப் போகத் துணிகிற மனம் உன் தந்தைக்கு இல்லையே, சுரமஞ்சரி! உன் தந்தைக்கு இந்தக் குணம் இருந்திருந்தால் தன் வாழ்வில் அவர் தொடக்கத்திலிருந்தே செம்மையாக வாழ்ந்திருக்கலாம் அம்மா...” என்று நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் அவர் அவளை நோக்கிக் கூறியபோது, அவருக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை. அவளுக்கு. தான் அப்போது நின்றுகொண்டிருந்த படிக்கு அடுத்த மேற் படியில் ஏறித் தன் தந்தைக்கு ஏதாவது ஆறுதலாய்ச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் என்ன சொல்வதென்று புலப்படவில்லை. அந்தப் பாசத்தையும் மனத்திலிருந்து கழற்றினாள் அவள்.

“இன்று அமைதியான இந்த இரவு வேளையில் என் தாயும், சகோதரி வானவல்லியும், தோழி வசந்தமாலையும் நன்றாக உறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது! ‘சுரமஞ்சரி எந்த வழியில் யாருடன் நடந்து போவதற்காக இத்தனை காலம் தவம் செய்துகொண்டிருந்தாளோ அந்த வழியில் அந்தத் துணையோடு இந்த இருளில் புறப்பட்டுப் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/128&oldid=1231858" இலிருந்து மீள்விக்கப்பட்டது