பக்கம்:மணி பல்லவம் 5.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

911

விட்டாள்’ என்று எல்லாரிடமும் நாளைக்கு விடிந்ததும் சொல்லிவிடுங்கள் அப்பா. மனம் இருந்தால் இப்போது எங்களுக்கு ஆசியும் கூறி அனுப்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கித் திரும்பிச் சென்று தன்னை வென்றவனுக்கு அருகில் நின்றபடி தன் தந்தையை நோக்கி வணங்கினாள் சுரமஞ்சரி.

“ஆசி கூற மனம் இருக்கிறதம்மா! ஆனால் தகுதி இல்லையே?” என்று இளங்குமரனின் பக்கமாகத் திரும்பிக் கைகளைக் கூப்பினார் அவர். அந்த நிலையில் அவரைக் கண்டு இளங்குமரனுக்கும் அநுதாபம் பெருகியது.

பெருமாளிகைத் தோட்டத்திலிருந்து முன் இரவிலேயே மலர்ந்துவிட்ட பூக்களின் மணம் பரவத் தொடங்கியிருந்தது. சுரமஞ்சரியைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறுவதற்காக மெல்ல நடந்தான் இளங்குமரன்.

இருவரும் மாளிகையின் கடைசி வாயிலையும் கடந்து இருள் உறங்கும் பட்டினப் பாக்கத்துத் தெருவில் இறங்கிச் சென்றபோது, “சுரமஞ்சரி! இன்று மாலை இந்த மாளிகைக்குள் நுழையும்போது நான் துறவியாக நுழைந்தேன். இப்போது ஒரு பெண்ணின் கையையும் நினைவையும் சுமந்து கொண்டு மிகப் பெரிய வாழ்க்கைச் சுமையோடு திரும்புகிறேன்” என்று அவளுடைய காதருகே சிரித்துக் கொண்டே சொன்னான் இளங்குமரன். அவன் அந்த வார்த்தைகளைச் சிரித்துக்கொண்டே சொல்லியிருந்தாலும், அவளுக்கு அவற்றைக் கேட்டு வேதனையாகத்தான் இருந்தது. அவன் தன்னுடைய தோல்வியையே திரும்பத் திரும்ப எண்ணி உருகுவது அவளுக்குப் புரிந்தது.

“தோற்றுப் போனதற்காக வருந்திக்கொண்டே பேசுவது போல் அடிக்கடி பேசுகிறீர்கள் நீங்கள். இந்த விதமான பேச்சு என்னைப் புண்படுத்துகிறது” என்று தன் மனக் குறையைச் சொன்னாள் அவள்.

அந்தச் சொற்கள் இனியும் அப்படிப் பேசவிடாமல் அவன் நாவைக் கட்டுப்படுத்தி அடக்கிவிட்டன, மெளனமாக மேலே நடந்தான் அவன். விடுபட்ட பறவைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/129&oldid=1231859" இலிருந்து மீள்விக்கப்பட்டது