பக்கம்:மணி பல்லவம் 5.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

913

சுரமஞ்சரி பெளத்த மடத்துக்கு அருகே யாத்திரிகர்களுக்குச் சோறிடுவதற்காக இருந்த அறக்கோட்டம் ஒன்றில் போய் ஒரு பெரிய வாழை இலை நிறையச் சோறு வாங்கி வந்து இளங்குமரனுக்கு முன்னால் வைத்தாள். தன் கையால் ஒவ்வொரு பிடியாக எடுத்து அந்தச் சோற்றை அவன் கையில் இட்டபோது அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இலையிலிருந்த மீதத்தைத் திரட்டிக் கடைசிப் பிடியை அவள் அவன் கையில் வைத்தபோது அந்தச் சோற்றை அப்படியே கைமறித்து அவள் வாய்க்கு இடுவதற்குக் கொண்டு போனான் இளங்குமரன், சுரமஞ்சரி அவன் கையால் அதை உண்பதற்கு நாணித் தலையைக் குனிந்துகொண்டாள். தன்னிடம் அன்பு செய்வதைவிடப் பெருமைப்படத் தக்க செல்வங்கள், உறவுகள், பாசங்கள், வேறெவையுமே இல்லை என்பதை நிரூபித்துவிட்ட அந்தப் பேரழகுப் பேதையை மலர்ந்த விழிகளால் நோக்கி அவளை ஏற்றுக்கொண்ட நாயகன் என்ற உரிமையோடு இளங்குமரன் முதல் முறையாகப் பார்த்தான். அந்தப் பார்வையே அப்போது அவளை மணப்பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.

“சுரமஞ்சரி! என்னுடைய சோதனைகளில் எல்லாம் நீ வெற்றி பெற்றுவிட்டாய். எல்லாப் பற்றுக்களையும் இழந்துவிட்டு ஏதாவது ஒரு பற்றில் மட்டும் இலயிப்பவனைத் துறவி என்கிறார்கள். நீயும் அப்படி உன் செல்வங்களையும் உறவுகளையும் இழந்துவிட்டு என்னில் கலந்து என்னோடு மட்டும் இலயித்து விட்டாய். உன்னுடைய இந்தத் தவத்தை நான் ஏற்றுக்கொண்டு அருள் செய்துதான் ஆக வேண்டும்” என்று இந்த வார்த்தைகளைச் சொல்லியபோது அவனுடைய மனம் நிறையப் பரிவு பெருகியிருந்தது. அந்தப் பரிவைச் சுரமஞ்சரிக்கும் அளிக்க அவன் மனம் இணங்கிற்று. அந்த எல்லையற்ற பரிவு வெள்ளத்தில் அவள் மூழ்கவும் இடம் கொடுத்தான் அவன். இரண்டாம் முறையாக அவன் கையிலிருந்த சோற்றை அவள் உண்ணும்போது சிறு குழந்தைபோல் அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

ம-58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/131&oldid=1231861" இலிருந்து மீள்விக்கப்பட்டது