பக்கம்:மணி பல்லவம் 5.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

926

மணிபல்லவம்

உங்களுக்கும் நிறைய நன்றிக் கடன் பட்டிருப்பது எனக்கே தெரிகிறது. ஆனால் அந்தக் கடனை எந்த விதத்தில் நான் தீர்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே விதத்தில் தீர்ப்பதற்கு இந்தப் பிறவியில் நான் இயலாதவனாகி விட்டேன். இந்தப் பிறவியில் என்னுடைய அனுபவங்கள் எல்லாம் சத்திய சோதனைகளாகிவிட்டன. சத்திய சோதனைகளில் இறங்குகிறவர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களைக்கூட ஏமாறச் செய்து விடும் படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியாமல் அடைந்துதான் ஆகவேண்டியிருக்கிறது. என்னுடைய குலப்பகைவரான எதிரியை நான் பழி வாங்கும் நோக்குடன் படைதிரட்டிப் புறப்பட மறுத்தபோது என் மாமன் மகனான குலபதிக்கு அது பெரிய ஏமாற்றமா இருந்தது. என் எதிரியை நான் சந்தித்து நியாயம் கேட்கிற முறையில் கொடுமையும் வன்மையும் வேண்டும் என்று எனக்குத் துணையாய்ப் பின் தொடர்ந்த நீலநாகரை நான் மறுத்துத் திருப்பி அனுப்பியபோது அவருக்கு ஏமாற்றமா இருந்தது. உங்கள் மகள் முல்லையை நான் மணம் புரிந்து கொள்ளாமற் போனது உங்களுக்கு ஏமாற்றமாயிருக்கிறது. சத்தியத்தை ஏமாற்றக் கூடாதென்று நாம் ஏதோ செய்தால் அதன் மறுபுறம் அந்தச் செய்கையால் ஏமாறிய மனிதர்கள் வந்து நிற்பதைக் காண்கிறோம். மனிதர்களுக்கு மட்டும் திருப்தியாக நடந்து கொண்டால் சத்தியத்தை ஏமாற்றியதாக முடிகிறது. சத்தியத்துக்குத் திருப்தியாக நடந்து கொண்டுவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்தச் சமயத்தில் அதே காரணத்தால் தாங்கள் ஏமாறியதாகச் சொல்லிக் கொண்டு மனிதர்கள் வந்து கண்கலங்கி நிற்கிறார்கள்.”

“உபதேசம் போதும்! இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளுவதற்கு நாங்கள் கற்றுத்துறை போகவில்லை. பொது மனிதர்களையும் பொதுவான மனித உறவுகளையும் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களுடைய வாழ்க்கையிலே இரண்டே இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/144&oldid=1231874" இலிருந்து மீள்விக்கப்பட்டது