பக்கம்:மணி பல்லவம் 5.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

927

எல்லைகள்தான் உண்டு. ஒன்று வீரம், மற்றொன்று அன்பு. இந்தக் குடும்பத்தில் எவரும் இந்த விநாடி வரை வீரத்தில் ஏமாறியதில்லை. ஆனால் இன்று இந்தக் குடும்பத்துப் பெண்ணொருத்தி அன்பில் ஏமாறிவிட்டாள். வெற்றியைத் தவிர வேறு வளர்ச்சிகளைக் கண்டறியாத இந்த வீரக்குடியின் வாழ்க்கையில் இன்று என் மகள் காதலிலே தோற்றுப் போய் வீழ்ந்து விட்டாள். இன்று காலையில் உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்தது. என் மகளுக்கு மட்டும் இருண்டு போய்விட்டது. உன்னுடைய இதயத்துக்கு உணரும் சக்தி இருந்தால் அறுபட்டு வீழ்ந்த பூங்கொடிபோல உள்ளே அவள் குமுறிக் குமுறி அழுது கொண்டிருப்பதை நீயும் உணர முடியும். ஆனால் நீ கல்நெஞ்சன். பகைவர்களுக்கு நல்லவனாகி உறவினர்களை ஏமாற்றும் வஞ்சகன்.

“நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்ட செய்தியை நான் இங்கு வந்து கூறியவுடனே என் மகள் இன்று காலை இந்த வீட்டின் படிகளில் நீ ஏறி வருவாய் என்று ஆவலோடு எதிர்பார்த்து நேற்றிரவிலிருந்தே எப்போது விடியும் எப்போதும் விடியும் என்று விடிவதற்காகவே இரவெல்லாம் கண் விழித்துக் காத்திருந்து விடிந்ததும் வாயிலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கோலம் இதோ இப்படி முடியாமல் முடிந்துவிட்டது.”

“.......”

சிறிது நேரம் மேலே ஒன்றும் பேசவராத மெளனத் தவிப்புக்குப் பின் வளநாடுடையார் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுத்தாற் போல் உள்ளே போய்விட்டார். மீண்டும் அவன் முகத்தைப் பார்த்து அவனோடு பேசும் விருப்பமே இல்லாதவராகத் திரும்பிப் போவது போலிருந்தது அவர் நடை. அப்படிப் போவதற்கு முன் இளங்குமரன் தன் வாழ்க்கைத் துணைவியோடு அவரை வணங்க முற்பட்டதும் வீணாயிற்று. அந்த வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமலே அவர் விரைந்து உள்ளே போய்விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/145&oldid=1231875" இலிருந்து மீள்விக்கப்பட்டது