பக்கம்:மணி பல்லவம் 5.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

931

யிருக்கிறது. அந்தத் தயக்கம் ‘நாம் இன்னும் மனிதர்கள் தான்’ என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடைய கல்வி, மனப்பக்குவம், பயிற்சியடைந்த உணர்வுகள் எல்லாம் அந்த விநாடிகளில் நம்மைக் கைவிட்டு விடுகின்றன. நாம் முயன்று சேர்த்துக்கொண்ட ஞானங்கள் எல்லாம் நம்மிடமிருந்து பிரிந்து நின்று கொண்டு ‘அதோ அதுதான் உன் பிறப்பிலேயே நீ கொணர்ந்த சொந்த ஞானம்’ என்று நம்மிடம் மீதமிருக்கும் புத்தியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கின்றன. ஈரேழு பதினான்கு புவனங்களையும் ஆட்டிப் படைக்கிற தவவலிமை பெற்ற பெருமுனிவர்களும் இந்த விதமான தளர்ச்சியைத் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்கள்.”

“நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. ஆனால் நிறைகுடமாகிய உங்கள் மனமும் இப்போது எதற்காகவோ கலங்கித் தவிக்கிறதென்று மட்டும் புரிகிறது.”

“உனக்கு அவ்வளவு புரிந்தால் போதும் சுரமஞ்சரி!” என்று கூறிவிட்டுக் காவிரி நீரில் குளிப்பதற்கு இறங்கினான் இளங்குமரன். அவளும் இறங்கினாள்.

இருவரும் நீராடி கரையேறிய வேளையில் “இப்போது என் கண்கள் எதிரே காண்பது கனவில்லையே?’ என்று பழகிய குரல் ஒன்று மிக அருகிலிருந்து அவர்களைக் கேட்டது. இளங்குமரன், சுரமஞ்சரி இருவருமே அந்தக் குரலைப் புரிந்துகொண்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.

மேலேயிருந்து ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் காவிரியில் நீராடுவதற்காகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் ஓவியன் மணிமார்பனைச் சந்தித்த சுரமஞ்சரிக்கு அவனிடம் பேசவும் நலம் தெரிந்து கொள்ளவும் ஆவல் எழுந்தது. அந்த ஆவலும் நாணமும் போராடக் கணவனோடு ஒன்றினாற்போல நின்றாள் அவள். நினைத்த சொற்களைப் பேச வரவில்லை. அதற்குள் ஓவியனே அவர்களை நோக்கிப் பேசினான்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/149&oldid=1231879" இலிருந்து மீள்விக்கப்பட்டது