பக்கம்:மணி பல்லவம் 5.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

932

மணிபல்லவம்

"ஐயா! நீங்கள் இருவரும் இப்படியே சிறிது நேரம் நில்லுங்கள். இந்தக் காட்சி என் கண்களில் நிறையட்டும். உமையொரு பாகனாகச் சிவபெருமான் நிற்பதுபோல் இந்தக் காலை வேளையில் எங்களுக்குக் காட்சியளிக்கிறீர்கள். இந்தப் புனிதமான வைகறை வேளையில் இதைக் கண்ட கண்கள் வாழ்க. ஓவியத்தில் பல முறை இப்படி உங்களை ஒன்று சேர்த்து எழுதி மகிழ்ந்திருக்கிறேன் நான். எனக்குத் திருமணமாகிய சில தினங்களில் நானும் என் மனைவியும் இயற்கை வளம் காண்பதற்காக பொதிகை மலைக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டுப் போயிருந்தோம். அன்று என் மனைவி பதுமை என் மனத்துக்குப் பெரிதும் விருப்பமான ஓவியம் எதையாவது நான் அந்த மலைச் சூழலில் வைத்து வரைய வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டாள். என் மனத்தில் முதல் முறையாக நான் பூம்புகாருக்கு வந்து திரும்பிய காலத்திலிருந்து நாளும் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிற ஓவியம் எதுவோ அதையே அன்று பொதிகைமலையில் அவளுக்கும் வரைந்து காண்பித்தேன். அந்த ஓவியத்தில் காதலர் இருவர் கற்பனையாய் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் மெய்யாகவே ஒன்று சேர்ந்திருப்பதை இன்று நானும் என் மனைவியும் இப்போது எங்கள் கண் எதிரே காண்கிறோம். நீங்கள் இருவரும் வாழ்க்கைப் படகில் இன்று ஒன்றாகவே பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். காதற் படகில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதாக நான் என் மனைவியிடம் முன்பே வரைந்து காட்டி மகிழ்ந்த ஓவியங்கள் கணக்கற்றவை.”

“மணிமார்பா! நீ பரிசுத்தமான கலைஞன். அதனால் தான் உன்னுடைய பழைய கற்பனைகள் எல்லாம் இன்று உன் கண்களே காணும்படி மெய்யாக மலர்கின்றன. இதோ என் பக்கத்தில் நாணி நிற்கிற பெருமாளிகைப் பெண் இப்படி என்னை அடைந்ததற்காக நன்றி செலுத்த வேண்டியவர்கள் யாராவது இருப்பார்களானால் அது நீ மட்டும்தான். நீண்ட காலத்துக்கு முன்பு அன்று இந்திர விழாக் கூட்டத்தில் நீ என்னைச் சந்தித்தபோது என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/150&oldid=1231880" இலிருந்து மீள்விக்கப்பட்டது