பக்கம்:மணி பல்லவம் 5.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

937

இங்கே என் வாழ்க்கைத் துணையாகி என்னுடனே வருகிறாய்...” என்று இளங்குமரன் அவளைக் கைப்பற்றி உள்ளே அழைத்துக்கொண்டு போனான்.

அவனையும் சுரமஞ்சரியையும் சேர்த்துப் பார்த்ததும் நீலநாகர் வெறுப்போடு அலட்சியமாகத் தலையைக் குனிந்துகொண்டார். பின்பு இளங்குமரனிடம் நேருக்கு நேர் பேச விரும்பாதவர் போல மணிமார்பனை விளித்துப் பேசினார்:-

“மணிமார்பா! உன்னுடைய நண்பன் இப்போது இங்கே எதற்காக வந்திருக்கிறான்? தன்னுடைய தோல்வியைக் கொண்டாடுவதற்காக இப்படி இங்கே திரும்பி வந்திருக்கிறானா என்று அவனைக் கேள்!”

“எந்தத் தோல்வியைச் சொல்கிறீர்கள்?” என்று இளங்குமரனே சிரித்தபடி அவரை எதிர்க்கேள்வி கேட்டான். எனினும் அவர் அவன் பக்கம் திரும்பாமலே பேசினார். முதலில் இருந்த கடுமை மட்டும் சற்றே குறைந்து விட்டாற் போல அவருடைய பேச்சு அவனை நோக்கியே பிறந்தது.

“இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் கற்றுப் பயின்று உரமேறிய இணையற்ற வீரமும், திருநாங்கூர் அடிகளிடம் குருகுலவாசம் செய்து பெற்ற வரம்பிலா ஞானமும் இப்படி இந்தப் பகைவன் மகளின் வளை சுமக்கும் கைகளுக்காகத் தோற்றுப்போய் விட்டாற் போலிருக்கிறது. இந்தத் தோல்விக் கோலத்தை நானும் காண வேண்டும் என்று என் முன்னாலே வந்து இப்படி நிற்க வெட்கமாக இல்லையா உனக்கு ?”

“வெட்கமாக இல்லை. பெருமையாகத்தான் இருக்கிறது. என் பெருமைக்குக் குறைவின்றி நானே விரும்பித் தோற்ற தோல்விதான் இது. இந்தத் தோல்வியில் எந்த விதமான தாழ்வையும் நான் உணரவில்லை. பெருமைப் படத்தக்க தோல்வி இது. எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் துணிவைப் போல எல்லா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/155&oldid=1231885" இலிருந்து மீள்விக்கப்பட்டது