பக்கம்:மணி பல்லவம் 5.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

938

மணிபல்லவம்

வற்றையும் விட்டு விடுகிற துணிவும் வீரனுக்கு இருக்க வேண்டும் என்று நீங்களே என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறீர்கள். யாரை மிக எளிதாக நம்மாலே வென்றுவிட முடியும் என்று நாம் உணர்கிறோமோ அவர்களுக்கே தோற்றுப்போய், விட்டுக் கொடுத்து விடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. பரிபூரணமான தெய்வீக இன்பம் அது. இந்த விதமான தோல்விக்குக் காரணமாக இருப்பது நமது கருணைதானே ஒழியப் பலவீனமன்று. தங்களால் வெல்ல முடிந்தவர்கள் மேலும் கருணை கொண்டு அவர்கள் தங்களுக்கு ஒப்பான நிலையில் தங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாததை எண்ணி இரங்கி அவர்களுக்கும் வெற்றி மகிழ்ச்சியை அளித்துப் பார்க்கலாமே என்ற பெருந்தன்மையோடு தோற்கிற தோல்வியைச் சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தத் தோல்வி சான்றாண்மையின் இலக்கணம். இதில் வெற்றியைவிட அதிகமான சுகம் உண்டு. அந்தச் சுகத்தை இப்போது நான் அடைந்து விட்டேன்.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்

என்று சால்பின் பண்பு சொல்லப்பட்டிருக்கிறது. பெரிய காரியங்களைச் சாதிப்பதற்காகவே மனத்தை ஆள வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். பிறருக்காக விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்கிற இந்தத் தோல்வி பெரிய காரியமில்லை என்று நீங்கள் எப்படிக் கூற முடியும்? அன்பையும் வீரத்தையும் தவிர, எங்கள் வாழ்வுக்கு வேறு எல்லைகள் இல்லை என்கிறார் வளநாடுடையார்! நீங்களோ நெகிழ்ச்சியில்லாத முரட்டு வீரம் ஒன்றைத் தவிர உங்கள் வாழ்வுக்கு வேறு எல்லையே இல்லை என்கிறீர்கள். தியாகப் பண்பு என்ற ஒன்று எனது வாழ்க்கையின் இணையற்றதொரு பேரெல்லையாக இருப்பதை நீங்களெல்லாம் மறந்துபோய் விட்டீர்களோ? என்னவோ? நெகிழ்ச்சியே சிறிதும் இல்லாத கொடுமை மறவராக நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டுவிட்டீர்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/156&oldid=1200042" இலிருந்து மீள்விக்கப்பட்டது