பக்கம்:மணி பல்லவம் 5.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

939

"என்னை நான் அப்படிப் பழக்கி வைத்துக் கொண்டிருந்தது உண்மைதான்! ஆனால் உன்மேல் பாசமும் அன்பும் கொள்ளத் தொடங்கிய நாளிலிருந்து அந்த இறுகிய குணத்தினின்றும் நான் என்னைத் தளர்த்திக் கொள்ளும்படி ஆகிவிட்டது. அப்படித் தளர்த்திக்கொள்ள நேராமல் நான் என் போக்கிலேயே இருந்திருந்தால் எவ்வளவோ விதங்களில் எனக்கு நன்றாயிருக்கும். உன் மேல் அன்புகொண்ட காரணத்தால் எனக்கு உண்டாகிய கவலைகள் ஏற்பட்டிருக்காது. நான் என்னுடைய கடமைகளைத் தவிர வேறு எந்தவிதமான உலக பந்தங்களிலும் சிக்கியிருக்கமாட்டேன். உன்னைப் போல் அழகும் வீரமும் ஞானமும் நிறைந்த இளைஞன் ஒருவனை என் மாணவனாக இந்த வாழ்க்கை வழியில் சந்தித்திருக்கா விட்டால் நான் எந்த மனிதன் மேலும் அன்பு, நெகிழ்ச்சி. பாசம், நமக்கு வேண்டியவனுக்கு இன்ன இடத்திலே இன்னது நேரிட்டுவிடுமோ என்ற கவலை இவற்றையெல்லாம் உலகத்தில் நான் உணர்வதற்குக் காரணமாக இருந்த முதல் மனிதன் நீ கடைசி மனிதனும் நீதான்.

“மறுபடியும் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீ மீண்டும் என் வாழ்க்கையில் குறுக்கிடாதே. அன்பையும் பாசங்களையும் என்னை உணரச் செய்யாதே. கடுமையான வீரத் துறவியாகவே என்னை வாழவிடு. உன்னைச் சந்திப்பதற்கு முன்பு எப்படியிருந்தேனோ அப்படிக் கர்ம வீரனாக வாழவிடு. நீ இங்கிருந்தால் எனக்கு உன்மேல் ஏற்பட்டுவிட்ட பாசங்களாலேயே நான் என் வழியில் கடுமையான இறுக்கத்தோடு வாழ முடியாமல் போய்விடலாம். உன்னுடைய வாழ்வு எப்படியிருந்தாலும் நீ மலர்ந்த மனத்தைப் பெற்றவன். கட்டுகளுக்கு நடுவேயும் விடுபட்டு வாழ முடிந்தவன். நான் இப்போது எதை உன்னுடைய தோல்வியாக நினைத்து ஏளனம் செய்கிறேனோ அதையே நீ உன்னுடைய வெற்றியாக என்னிடம் நிரூபிக்கிறாய். அப்படி நிரூபிப்பதற்கு நீ கற்றிருக்கிற கல்வியும், தத்துவங்களும் உனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/157&oldid=1231886" இலிருந்து மீள்விக்கப்பட்டது