பக்கம்:மணி பல்லவம் 5.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

940

மணிபல்லவம்

துணை செய்கின்றன. நீ நிரூபிப்பதை மறுப்பதற்கு என்னிடம் சொற்கள் இல்லை...”

“எப்படியோ கோபத்தோடு பேச்சைத் தொடங்கிக் கொதித்தவர் இறுதியில் இப்படித் தன்னை நோக்கிக் கண் கலங்கி நின்றபோது, இளங்குமரனுக்கு அவருடைய உண்மை நிலை புரிந்தது. அந்தப் பெரு வீரருடைய கண்களையும் கலங்கச் செய்துவிட்ட பாவத்துக்கு வருத்தியவனாகிய அவன் தயங்கி நின்றான். முல்லையைப் போலவே இவரும் வேறு ஒருவிதமான அன்புப் பிடிவாதத்தினால்தான் தன்னிடம் இந்தச் சினமும் இந்தக் கலக்கமும் அடைந்து நிற்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. தன்மேல் அவர் வைத்துவிட்ட அன்பே அவரை இந்த இரண்டுங்கெட்ட நிலைக்கு ஆளாக்கி வேதனைப் படுத்துகிறது என்பதை அவன் விளங்கிக்கொண்டான்.

அந்த நிலை விளங்கியவுடனே தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. அப்படி உணர்ந்த உடனே சுரமஞ்சரியோடு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் அவன்.

பின்பு நிதானமாக எழுந்து நின்றுகொண்டு, “எங்களுக்கு விடை தந்தருளுங்கள் ஐயா! உங்களுடைய கடுமையான வீர வாழ்க்கைக் கடமை மறுபடி உங்களுடைய கிடைக்கட்டும். கடுமையான வாழ்க்கையினால் இந்தச் சோழநாட்டுக்கு அந்த ஆயிரமாயிரம் புதிய வீரர்கள் தோன்ற வேண்டும். அதற்கு நான் ஒருவன் தடையாக இருக்க விரும்பவில்லை. என்மேல் அன்பு கொள்வதன் காரணமாக வீரர்களைத் தோற்றுவிக்கிற பெருவீரரின் மனம் அப்படிச் சலனமடைய நேர வேண்டாம்” என்று நெகிழ்ந்த மனத்தோடு அவரை வேண்டிக்கொண்டு தன் மனைவியுடனே புறப்பட முற்பட்டான் இளங்குமரன்.

நீலநாகர் இளங்குமரனுக்காக மட்டும் இதுவரை சற்றே நெகிழ்ந்து திறந்திருந்த தம் மனத்தின் உணர்ச்சிக் கதவுகளை இப்போது நன்றாக இறுக்கி அடைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/158&oldid=1231887" இலிருந்து மீள்விக்கப்பட்டது