பக்கம்:மணி பல்லவம் 5.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

944

மணிபல்லவம்

துக்கத்தைப் போக்க வேண்டும். அதன்பின் அவளை வேறு விதமான வாழ்க்கைக்குத் துணியும்படி பயிற்ற வேண்டும்?”

“யார் அந்தப் பேதைப் பெண்?”

“வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லை. அவளைச் சந்தித்து அவளுடைய துன்பங்களுக்கு நீங்கள் அடிக்கடி ஆறுதல் கூற வேண்டும்.”

“அவளுக்கு என்ன துன்பம்?”

“உங்களைப் போன்ற புனிதவதிகளுக்குப் பெரிதாகப் படாத துன்பம் அது! அந்தத் துன்பத்தை என் சொற்களால் நான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. அப்படிச் சொல்வதற்கு நானும் என் மனமும் கூசி நிற்பதற்குரிய செய்தி அது. அந்தப் பெண்ணின் துன்பங்களுக்கு இனிமேல் உங்கள் வார்த்தைகள்தான் மருந்தாக வேண்டும். ஆனால் இந்த வேண்டுகோளை நான் உங்களிடம் வேண்டியதாக அவளுக்குத் தெரியலாகாது.”

“புரிகிறது! துக்கமும் வேதனையும் நிறைந்து கிடக்கும் இந்த உலகத்தின் பொது வழிகளிலிருந்து பிரித்து என்னுடைய வழியில் நான் அழைத்துக்கொண்டு போவதற்கு ஒரு பெண்ணை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டுகிறீர்கள். அவளை அந்த வழியில் அழைத்துச் செல்ல எனக்கு ஒரு மறுப்பும் இல்லை. இந்த உதவியை அவசியம் உங்களுக்கு நான் செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டாள் விசாகை, தன் கண்களின் பார்வையாலேயே புண்ணியத்தைப் பரப்பவல்ல அந்தத் தெய்வீகப் பெண்ணுக்கு இப்போது மீண்டும் வணக்கம் செலுத்தி விடை கொடுத்தான் இளங்குமரன். சுரமஞ்சரியும் பயபக்தியோடு விசாகையை வணங்கினாள். “நீ கொடுத்து வைத்தவள் பெண்ணே! எவராலும் வெல்ல முடியாத மனத்தை உன் அறிவினால் வென்றிருக்கிறாய்” என்று தன்னை வணங்கிய சுரமஞ்சரியை வாழ்த்திவிட்டுச் சென்றாள் விசாகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/162&oldid=1231891" இலிருந்து மீள்விக்கப்பட்டது