பக்கம்:மணி பல்லவம் 5.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

953

அவளுடைய தாகம் எந்தப் பிறவியில் தீரும்? நூறு நூறு சமய ஞானிகளை வென்று பெற்ற வெற்றிப் பெருமிதத்தினாலும் அவள் மனம் நிறையவில்லை. யாரோ ஒருவனுக்கு என்றோ ஒருநாள் தோற்றதையே அவள் இன்னும் எண்ணி வருந்துகிறாள். எந்தக் கோலத்தையோ அரை குறையாக நிறுத்திவிட்டு இந்தத் தவக்கோலத்தை மேற்கொண்டாள் அவள். இந்தக் கோலமும் நிறையாதபடி இப்போது மனம் தவிக்கிறது. தனக்கு உள்ளேயே அடங்காமல் உள் நெருப்பாய்க் கொதிக்கிறது.

மறுபடியும் அவள் இளங்குமரனைச் சந்திக்க விரும்புகிறாள். ஆனால் இந்தப் பிறவியில் இன்று நாளங்காடியில் சந்தித்தது போல இதே ஏமாற்றங்களோடு அல்ல, தன்னுடைய நிறைவடையாத நினைவுகளை நிறைவு செய்துகொள்வதற்காக அவள் இன்னொரு பிறவி எடுக்க ஆசைப்படுகிறாள். அப்போது இதே பூம்புகாரின் புற வீதியில் ஏதாவதொரு வீரக் குடும்பத்தில் இளங்குமரனும் கட்டழகனாகப் பிறந்திருப்பான். அவனை அவள் அடைவதற்கு எந்தப் பகைமையும் இருக்காது. எந்தப் போட்டியும் இருக்காது.

அந்தப் பிறவி வாய்க்கிறவரை அவள் இந்த உலகத்துச் சுகங்களுக்கெல்லாம் தன்னிடமிருந்து நிரந்தரமாக விடை கொடுக்கிறாள்.

“வாழ்வதற்கென்று வாய்க்கும் சுகங்களே ! உங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறேன். மீண்டும் அடுத்த பிறவியில் என்னை வந்து சந்தியுங்கள். அப்போது நானும் அவரும் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம்” என்று கற்றும் கற்காத பேதையாய்த் தனக்குத்தானே கூறிக்கொண்டு அந்த மரத்தடியிலிருந்து எழுந்து நடக்கிறாள் அவள். சில கணங்களில் அவள் தோற்றமும் பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது. இந்திர விழாவின் பெருங்கூட்டத்தில் யாரோ ஒருத்தியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/171&oldid=1231901" இலிருந்து மீள்விக்கப்பட்டது