பக்கம்:மணி பல்லவம் 5.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

802

மணிபல்லவம்

மாளிகைக்குத் திரும்பியதும் குலபதி இளங்குமரனுக்கும் வளநாடுடையாருக்கும் அறுசுவை விருந்து படைத்தான். பொன்னும், மணியும், முத்துக்களும், இரத்தினமுமாகப் பார்க்கும் இடமெல்லாம் ஒளி நிறைந்து தோன்றினாலும் அந்த மாளிகையில் ஏதோ ஒரு குறை இருப்பதாய்ப் புறத்தோற்றத்தில் தெரிந்தும், தெரியாததான ஒரு நிலையை இளங்குமரன் உணர்ந்தான். அந்தக் குறையைப் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் இளங்குமரா! இந்த உணவு விருந்தைக் காட்டிலும் பெரிய விருந்து ஒன்றை இன்னும் சிறிது நாழிகையில் குலபதி உனக்கு அளிக்கப் போகிறான். பலநாள் பசியைத் தீர்க்கப் போகிற உணவு அது!’ என்று பேச்சைத் திருப்பிப் புதிய கவனத்திற்கு மாற்றினார் வளநாடுடையார். அதுவரை மெளனமாய் அமர்ந்து பசியாறிக்கொண்டிருந்த இளங் குமரன், “அது என்ன அப்படிப் புதுமையான உணவு ?” என்று அவரைக் கேட்டான். அவனுடைய கேள்விக்கு வளநாடுடையார் மறுமொழி கூறவில்லை. அதற்குள் குலபதியே முந்திக்கொண்டு கூறினான்.

“விருந்து என்றாலே புதுமையானதென்றுதான் பொருள். உண்ணும் பொருளும் பசியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள பழைய பழக்கம் தான். அதுவே பழகிய பழக்கமும் ஆகிறது. ஆனால் உண்கிற இடமும் உபசாரம் செய்கிற மனிதர்களும் புதுமையாக இருந்தால் அதை விருந்து என்கிறோம். நானோ இன்று புதுமையான பொருள்களையே உங்களுக்குக் காட்டப்போகிறேன். அந்தப் புதிய பொருள்கள் உங்களுடைய பழைய விருப்பங்களைத் தீர்க்கிறவையாகவும் அமையலாம். இந்தப் பழம் பெரும் மாளிகையில் ஒவியமாடம் என்று ஒரு பகுதியிருக்கிறது. அதில் இந்த மாளிகைக்குள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக வாழ்ந்து முடிந்தவர்களின் ஒவியங்களும் வாழ்க்கை நிகழ்ச்சிகளும், வாழும்போது புனைந்து கொண்ட பொருள்களும் சேர்த்து வைக்கப்பட்டிருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/20&oldid=1231762" இலிருந்து மீள்விக்கப்பட்டது