பக்கம்:மணி பல்லவம் 5.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

831

“புத்த ஞாயிற்றின் தோற்றத்துக்குரிய சிறந்த நாளாக வைசாக பூர்ணிமையைக் கொண்டாடுவது மட்டும் எங்களுடைய சடங்கு அல்ல! ‘எல்லா உயிரும் எங்கும் எப்போதும் எல்லா விதத்திலும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற முதிர்ந்த கருணை யார் மனத்தில் எந்த விநாடி தோன்றினாலும் அங்கே அந்த விநாடியில் புத்த ஞாயிறு பிறந்துவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும். உயிர் இரக்கம்தான் பெரிய ஞானம். அது யார் மனத்தில் இருந்தாலும் அவர்களைப் புத்தர் போற்றுகிறார். ஆசைகளால் தான் கோபமும், வெறுப்பும் உண்டாகின்றன. ஆசைகள் அழிந்தால் எதன்மேலும் கோபமில்லை. எதன் மேலும் வெறுப்பில்லை. எப்போதும் மனம் இந்த உலகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருக்கிற உபசாந்தி நிலை சித்திக்கிறது” என்று விசாகை ஆர்வம் மேலிட்டுக் கூறிக் கொண்டே வந்தபோது இளங்குமரன் நடுவில் இடையிட்டுப் பேசினான்:

“இப்போது நான் கூறப் போகிற செய்தியைக் கேட்டு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். அம்மையாரே! ‘உபசாந்தி நிலை’யை அடையவேண்டும். அடைய வேண்டும் என்று நான் தவித்த காலமெல்லாம் போய் என் மனம் அந்த நிலைக்குப் பக்குவமாகி நிற்கும் இந்தச் சமயத்தில் அதை நானே இழக்க வேண்டியவனாகிவிட்டேன். நாளைக்கு இந்த வேளையில் இதே தீவின் வேறொரு பகுதியிலே என் மனத்தின் எல்லையெல்லாம் யார்மேலோ எதற்காகவோ கோபமும் வெறுப்பும் ஏற்படப் போகிறது. தீக்கடைகோலைப் போல என் எண்ணங்களைத் தூண்டிக் கடைந்து யாரோ பார்மேலோ என்நெஞ்சில் கனலை மூட்டப் போகிறார்கள். இந்தப் புண்ணியத் தீவுக்கு ஒரு முறை வந்து இதன் மண்ணை மிதித்து நடந்தாலே உபசாந்தி நிலை கிடைக்கும் என்று உங்கள் சமயத்தைச் சேர்ந்த துறவிகள் சொல்கிறார்கள். எனக்கோ இங்கு வந்தபின் ஏற்கெனவே கிடைத்திருந்த மன அமைதியும் போய்விடும் போல் இருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/49&oldid=1231784" இலிருந்து மீள்விக்கப்பட்டது