பக்கம்:மணி பல்லவம் 5.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

837

மதுரை திரும்பிவிடலாம் என்று எண்ணுகிறோம்...” என்றான் மணிமார்பன். அவன் குரலில் ஊர் திரும்பும் ஆவல் மிகுந்து தொனித்தது.

ஆனால், இளங்குமரனும் வளநாடுடையாரும் ஓவியனுக்கு விடை கொடுக்க மறுத்துவிட்டார்கள். இளங்குமரன் ஓவியனை அன்போடு தழுவிக் கொண்டு அவனிடம் கூறினான்:

“நீ எங்களோடு மணிநாகபுரத்திற்கு வரவேண்டிய அவசியம் இருக்கிறது மணிமார்பா! எனக்கு மிகவும் வேண்டியவனாகிய குலபதி என்னும் மணிநாகபுரத்து இரத்தின வாணிகனுடைய மாளிகையில் அற்புதமான ஓவிய மாடம் ஒன்றிருக்கிறது. அதை நீ காண வேண்டும். வேறு பல காரணங்களாலும் நீ இன்னும் சில நாட்களுக்கு என்னோடு உடனிருக்க வேண்டும்.”

இளங்குமரனுடைய இந்த அன்பான வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களோடு மணிநாகபுரத்திற்குக் கப்பலேறினார்கள், அன்று மணிபல்லவத்தைச் சூழ்ந்துள்ள கடலில் நீர்ப்பரப்பே தெரிவதற்கு இடைவெளியின்றி எங்கு நோக்கினும் அலங்கரிக்கப் பெற்ற கப்பல்களும் மரக்கலங்களும் போய்க் கொண்டிருந்தன. நிலா ஒளியின் கீழ் அந்த அழகிய சூழ்நிலையில் அவர்கள் மணிநாக புரத்திற்குப் புறப்பட்டிருந்தார்கள். பரபரப்பான சூழ்நிலையில் முதல்நாள் இரவு அருட்செல்வ முனிவரிடம் இந்த ஒரே ஒரு நாளைப் பிச்சை கேட்டுப் பெற்றுக் கொண்டு அவசரமாக இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்ததும் இந்த ஒருநாள் கழிந்துபோன வேகம் தெரியாமல் இப்படிக் கழிந்துபோனதும், இப்போது மீண்டும் மணிநாகபுரத்திற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருப்பதுமாக ஒவ்வொன்றாகவும் விரைவாகவும் நடக்கும் தன்னுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எண்ணியபோது இளங்குமரனுக்கு மிகவும் விந்தையாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/55&oldid=1231789" இலிருந்து மீள்விக்கப்பட்டது