பக்கம்:மணி பல்லவம் 5.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

838

மணிபல்லவம்

‘தாயின் கருவிலிருந்து புறப்பட்டு வந்து இந்த மண்ணில் குதித்த முதல் விநாடி தொடங்கி உயிர் வாழ்க்கையே ஒரு பெரிய யாத்திரைதான். போலிருக்கிறது! எங்கும் நடக்காமல் தங்கிவிடும்போது மனத்தினாலும், எங்கும் தங்காமல் நடக்கும்போது கால்களாலும் மாறிமாறி எதை நோக்கியோ யாத்திரை செய்துகொண்டே இருக்கிறோம். கால்களால் முடியாதபோது எண்ணங்களாலும், எண்ணங்களால் முடியாதபோது கால்களாலும் எங்காவது சென்று கொண்டே இருக்கிறோம் என்று எண்ணியபடியே நிலாவையும் வானத்தையும் ஏக்கத்துடனே பார்த்தான் இளங்குமரன்.

அப்போது அவனைப் போலவே நிலாவையும் கப்பல்கள் செல்லும் கடலையும் தீபாலங்காரங்களோடு நாற்புறமும் மின்னும் தீவுகளையும் பார்த்துக்கொண்டே அருகில் நின்ற மணிமார்பன் அதே ஏக்கத்தோடு தன் அனுபவம் ஒன்றை இளங்குமரனிடம் கூறினான்.

“இந்த உலகில் எத்தனையோ காட்சிகள் நம்முடைய பார்வைக்கும், நினைப்புக்கும், அழகாகவும் நயமாகவும் தோன்றிப் படைப்புக்கு மட்டும் உயர்ந்தவையாகவும் அரியவையாகவும் போய் மேலே நின்றுகொள்கின்றன. இப்போது இந்த வானமும் கடலும், தீவுப் பகுதிகளும் ஓவியத்திற்கு உரிய அழகுக் காட்சிகளாக எனக்குத் தோன்றுகின்றன. இவற்றை நான் நினைப்பிற் கொண்டு வந்து படைக்க முயலும்போது எப்படியோ?”

“எப்படியானாலும் அதுதான் இயற்கையின் வெற்றி மணிமார்பா! உன்னுடைய நிறங்களை நீ இயற்கையிலிருந்து கற்றாய். உன்னுடைய நிறங்களால் நீ வரையப் போவது எதுவோ அதையும் இயற்கையிலிருந்து காண்கிறாய். எல்லாவிதத்திலும் உனக்கு ஆசிரியனாக இருக்கும் ஒரு பொருள் உன்னைவிட உயர்ந்து நிற்பது இயல்பு தானே?” என்றான் இளங்குமரன். இவ்வாறே மணி மார்பனும் இளங்குமரனும் பல செய்திகளைப் பற்றி உரையாடிக் கொண்டே சென்றார்கள். மணிமார்பனின் மனைவி தொலைவில் தெரியும் நிலாவொளி அழகோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/56&oldid=1231790" இலிருந்து மீள்விக்கப்பட்டது