பக்கம்:மணி பல்லவம் 5.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

840

மணிபல்லவம்

வைத்துக்கொண்டே சலனம் அடைந்த மனத்தோடு எதற்காகவோ சிறிது தயங்கினான் இளங்குமரன்.

“எதற்காகவும் தயங்காதே! இந்த ஏடுகளில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புக்களை இருநூறு வெண்பாக்களாகவும், உரைச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துப் பொருள் விளங்கிக்கொண்டு நீ தெளிவு பெறுவதற்கு நாளைக் காலை வரை ஆகலாம். அதோ நிலவும் உச்சி வானத்துக்குப் போய்விட்டது. இனியும் தாமதம் செய்யாமல் இந்த ஏடுகளைப் படிக்கத் தொடங்கிவிடு” என்று கூறிவிட்டு அந்த அறைக் கதவுகளை இழுத்து அடைத்து வெளியே தாழிட்டுக்கொண்டு போய் விட்டார் அவர். ‘மனம் வெதும்பி வாட நேர்கிற துன்ப அநுபவங்களையும் தாங்கிக்கொண்டுதான் வளர வேண்டும்’ என்று தன் மனத்தை மீண்டும் உறுதி செய்து கொண்டவனாக அந்தச் சுவடியில் முதல் ஏட்டிலிருந்த முதல் பாட்டைப் படிக்கலானான் இளங்குமரன். அந்த முதல் ஏடானது மிகவும் அண்மையில் எழுத்தாணியால் கீறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

‘என் மனத்தில் சினம் கனல வேண்டும் என்ற உட்கருத்தோடு என்னை நோக்கிச் சொல்வது போலவே முனிவர் இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் போலும்’ என்று எண்ணியவாறே மறுபடியும் அதைப் படித்தான் இளங்குமரன்.

தாயைச் சிதைத்த தனிக்கொடுமை யொன்றன்றி
நீயும் நினதரிய செல்வமுமே போயொழியத்
தீமை பலசெய்த சீரழிவை நீறாக்கத்
தீயென் றெழுக சினம்

அடுத்த ஏட்டைப் புரட்டினான் இளங்குமரன். கோவை செய்யப்பட்டிருந்த பட்டுக் கயிற்றிலிருந்து ஒவ்வோர் ஏடாகக் கழன்றபோது அவன் மனத்தின் நீண்ட நாள் சந்தேகங்களும் ஒவ்வொன்றாகக் கழன்றன. கல்வியினாலும் தத்துவ ஞானத்தினாலும் அவன் தனக்குள் சேர்த்திருந்த மெல்லிய உணர்வுகள் நெருப்பு காயக் காய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/58&oldid=1231686" இலிருந்து மீள்விக்கப்பட்டது