பக்கம்:மணி பல்லவம் 5.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

849

மனத்தைத் தோற்கக் கொடுத்துவிட்டேன்” என்று மருதி பேசிய சொற்களைக் கேட்டபோது எட்டிகுமரன் பெருநிதிச் செல்வர் இரண்டு கண்களும் நெருப்பாகச் சிவந்து சினம் பொங்க அமுதசாகரனையும் அவன் அருகில் நின்ற மருதியையும் ஒரு பார்வை பார்த்தார். அவருடைய பார்வையைத் தாங்கிக் கொள்ளவே பயந்து கூசி நின்றான் அந்தக் கவி.

அந்தக் கணமே அடிபட்ட வேங்கைபோல் அவமானம் அடைந்து தலைகுனிந்து வெளியேறிய பெருநிதிச் செல்வரும், அவருடைய அமைச்சரும் அந்த மாளிகையின் கடைசி வாயிற்படியில் இறங்கி வெளியேறுமுன் செய்து விட்டுப் போன சூளுரை மிகவும் கொடுமையாக இருந்தது. காலாந்தக தேவர் அவர்களை ஆற்றுவிக்க முயன்றதும் வீணாயிற்று. கவி அமுதசாகரன் ஓடிப்போய்த் தன் தலைவரின் கால்களைப் பற்றிக்கொண்டு, “ஐயா! நான் ஒரு பாவமும் அறியேன். என்மேல் சினம் கொள்ளாதீர்கள். இந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கும்போது இவளைப் பொழிலில் பார்த்தேன். நிர்மலமான மனத்தோடு சில கவிதைகள் பாடினேன்” என்று கதறினான். இப்படி அவன் அவர் கால்களில் வீழ்ந்தபோது உடனிருந்த ஒற்றைக்கண்ணர் தன் உடைவாளை உருவிக்கொண்டு அவனைக் குத்திவிடுவது போலப் பாய்ந்தார். அப்போது இதைப் பார்த்துக்கொண்டிருந்த நாகநங்கை மருதி மிகப் பெரிய வீராங்கனையாக ஓடிவந்து அவர் கையில் இருந்த வாளைப் பறித்து எறிந்துவிட்டு, “இவர் என் அன்புக்கு உரியவர்! இவரை நான் எனக்குரியவராக வரித்துக்கொண்டேன். நீங்கள் போகலாம். இவருக்குக் கெடுதல் செய்ய முயன்றால் நீங்கள் இருவரும் இந்தத் தீவின் எல்லையிலிருந்து உயிரோடு பூம்புகாருக்குத் திரும்ப மாட்டீர்கள்” என்று அறை கூவினாள்.

“இதைக் கேட்டுப் பெருநிதிச்செல்வர் எரிமலையாகச் சீறினார்.”

“யார் உயிரோடு வாழ முடியும், யார் உயிரோடு வாழ முடியாது என்பதைக் காலம் சொல்லும், பெண்ணே!

ம-54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/67&oldid=1231798" இலிருந்து மீள்விக்கப்பட்டது