பக்கம்:மணி பல்லவம் 5.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

850

மணிபல்லவம்

என்னுடைய சூளுரையை ஞாபகம் வைத்துக்கொள். இந்த ஏழைக் கவிஞனுடைய உயிருக்கு நீ என்னிடமே வந்து மன்றாடிப் பிச்சை கேட்கிறபடி நான் செய்வேன் என்பதை மறந்துவிடாதே” என்று கூறிவிட்டு நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக்கொண்டு சங்குவேலித் துறையில் வந்து பூம்புகாருக்குக் கப்பலேறிவிட்டார் எட்டிக் குமரன் பெருநிதிச் செல்வர். அருமைத் தங்கையின் ஆசைக்கு மறுப்புக் கூற முடியாத நிலையில் காலாந்தகன் அந்த கவிக்கே அவளை மணம் செய்துகொடுத்துத் தன் மாளிகையோடு அவனைத் தங்கச் செய்துகொண்டான்.

அமுதசாகரன் எட்டுத் திங்கட்காலம் மணிநாகபுரத்தில் காவிய வாழ்வு வாழ்ந்தான். மருதி அவனைத் தன் அன்பு வெள்ளத்தில் மூழ்கச் செய்தாள். அவனுடைய சொற்களுக்குத் தன் அழகை மூலதனமாக்கி எண்ணற்ற கவிதைகளைப் படைத்துக் கொண்டாள். ‘ஒன்பதாந் திங்களில் தான் பூம்புகாருக்குப் போய்த் திரும்ப வேண்டும்’ என்று விரும்பினான் அமுதசாகரன்.

“பூம்புகாரில் யார் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்! அந்தக் கொடிய செல்வரைத் தேடிப் போய் மீண்டும் அவரைச் சந்திக்கும் கருத்து உங்களுக்கு இருக்கலாகாது” என்றாள் மருதி.

“எனக்கு வேண்டிய முனிவர்கள் பூம்புகாரின் சக்கரவாளத்துத் தவச்சாலையில் பலர் இருக்கிறார்கள். அருட்செல்வர் என்ற துறவியின் தவச்சாலையில் போய் நான் தங்கிக்கொள்வேன். ஒரு திங்கட்காலம் மட்டும் உன்னைப் பிரிந்து பூம்புகாருக்குப் போய் வர நீ எனக்கு விடை கொடு” என்று கேட்டான் அமுதசாகரன்.

அந்தப் பேதையும் அவனுக்கு விடை கொடுத்தாள். தமையனான காலாந்தகனிடம் சொல்லி ஒரு தனிக் கப்பலில் அளவிட முடியாத செல்வங்களை நிறைத்து அமுதசாகரனைப் பூம்புகாருக்கு அனுப்பினாள் மருதி. அவனுக்கு விடை கொடுக்கும்போது மருதி கருக் கொண்டிருந்தாள். கணவன் பூம்புகாரிலிருந்து திரும்பியதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/68&oldid=1231799" இலிருந்து மீள்விக்கப்பட்டது