பக்கம்:மணி பல்லவம் 5.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

851

அவனிடம் அந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கூறி அவனைக் களிப்பு வெள்ளத்தில் ஆழ்த்த வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். பேதைப் பெண்ணின் ஆசைக் கனவுகளுக்கு அளவு ஏது? பாவம்!

அமுதசாகரன் பூம்புகாரில் வந்து அருட் செல்வருடைய தவச்சாலையில் தங்கினான். மணநாகபுரத்தில் தன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களையும் பெருநிதிச் செல்வரின் சீற்றத்தையும் அவரிடம் கூறினான். பூம்புகாரில் உள்ள வாணிகக் குடும்பத்து நங்கை ஒருத்தியையே பெருநிதிச் செல்வர் மணம் புரிந்து கொண்டுவிட்டார் என்ற செய்தியை முனிவர் அமுதசாகரனுக்குக் கூறினார்.

“திருமணமான பின்பு அவருடைய மனம் அமைதியடைந்திருக்கும். நான் அவரைப் பார்த்து வரலாமல்லவா?” என்று முனிவரை வினவினான் அமுதசாகரன். அருட்செல்வர் அவன் கருத்தை அவ்வளவாக விரும்பவில்லை.

“உன் விருப்பம்! ஆனால் அந்த வாணிகனும் அவனோடு திரியும் ஒற்றைக் கண்ணனும் மிகவும் கெட்டவர்கள். நீ சூதுவாதில்லாத அப்பாவியாதலால் உனக்கு அவர்களுடைய உள்வேடம் தெரியாது. அவர்களுடைய மிகப்பெரிய வாணிகம் கடல் கொள்ளையும் கொலையும்தான்” என்றார் அவர்.

அமுதசாகரன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. முனிவருடைய அறிவுரையை மீறிக்கொண்டு பெருநிதிச் செல்வரைச் சந்திக்க புறப்பட்டான். அப்படிப் புறப்பட்டுப் போனவன் திரும்பவே இல்லை. எட்டுத் தினங்கள் வரை பொறுமையாக இருந்த அருட்செல்வர் ஒன்பதாவது நாள் காலையில் பொறுமை கலைந்து பட்டினப்பாக்கத்திற்குப் போய்ப் பெருநிதிச் செல்வரைச் சந்தித்துக் கேட்டார்:

“உங்களைத் தேடிக்கொண்டு எட்டு நாட்களுக்கு முன்பு இங்கே வந்த கவி அமுதசாகரன் இன்னும் திரும்பவில்லையே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/69&oldid=1231800" இலிருந்து மீள்விக்கப்பட்டது