பக்கம்:மணி பல்லவம் 5.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. கருணை மறமும் கழிவிரக்கமும்

மறுநாள் பொழுது விடிந்தால் புத்த பூர்ணிமையாதலால் அன்று மணிநாகபுரத்துத் தெருக்கள் நன்றாக அலங்கரிக்கப் பெற்றிருந்தன. கரையோரங்களில் முத்துக் குளித்தெடுக்கும் முத்துச் சலாபங்களும், உள்நிலப் பகுதிகளில் நாகரத்தினங்களும், வேறு பல்வகை மணிகளும் வளமாக நிறைந்துள்ள அந்தத் தீவின் தலைமையான நகரமாயிருந்ததனால் மணிநாகபுரம் நோக்கிய திசையெல்லாம் செல்வச் செழிப்புக் கொண்டு விளங்கியது. அந்த நகரத்து வீதிகளில் புலிநகக் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கின. அல்லியும் குவளையும் அலர்ந்த அழகுப் பொய்கைகள் அங்கங்கே தோன்றின. தரையை ஒட்டித் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரங்களும், மடல் விரித்து மணம் கமழும் தாழை மரங்களும் கடற் காற்றில் ஒரே சீராக ஒலித்துக் கொண்டிருந்தன. வெள்ளியைப் பொடி செய்து குவித்தாற்போல வெள்ளை வெளேரென்று மின்னும் மணற்பரப்பும், சிற்சில இடங்களில் கருமை நிறம் மின்னும் மணற்பரப்புமாக வாழ்க்கைக் கடலின் அலைகளில் சுகமும் துக்கமும் மாறி மாறி ஒதுக்கப்பட்டுக் குவிவதைப் போல வெண்மையும் கருப்புமாகக் குவிந்திருந்தன. மிக அருகில் தென்படும் அலைவளமும் தீவுக்குள்ளே தொலைவில் உள்ளடங்கித் தென்படும் மலைவளமுமாக இயற்கையின் ஆழத்தையும், உயர்த்தையும் அழகுற விளக்குவதுபோல் தென்பட்ட அந்த நாட்டின் காட்சியில் இளங்குமரனின் மனம் ஈடுபட்டது. மணிமார்பனோ ஒவிய ஆர்வத்தோடு இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

தழைத்து நீண்டு வளர்ந்து கருமை நிறத்தில் சிற்றலையோடிச் சரிந்து மின்னுகிற கூந்தலை மூன்று நாகப் படங்கள் போலவும், ஐந்து நாகப்படங்கள் போலவும், ஏழு நாகப்படங்கள் போலவும், பகுத்து அலங்காரமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/7&oldid=1194302" இலிருந்து மீள்விக்கப்பட்டது