பக்கம்:மணி பல்லவம் 5.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

858

மணிபல்லவம்

'மருதியின் மகனான இளங்குமரன் வளர்ந்து பெரியவனான பின் இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்கச் செய்யலாம் என்று தோன்றியது அவருக்கு. அந்தக் குடும்பத்தின் புதிய தலைமுறைக்குத் தன்னைப் பாதுகாவலராகப் பாவித்துக் கொண்டு குலபதி, இளங்குமரன் இரண்டு பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவும் இடைவிடாமல் மனத்தினாலும் செயல்களாலும் தவம் செய்துகொண்டு வந்தார் அருட்செல்வர்.

அவ்வப்போது குலபதிக்குத் தக்கவர்கள் மூலம் செய்தி சொல்லியனுப்பிக் கொண்டிருந்தார் முனிவர். உதிர் சருகுகள்போல் ஆண்டுகள் பல கழிந்துகொண்டிருந்தன. அந்த முனிவர் மூத்துத் தளர்ந்தாலும் அவருடைய இலட்சியமும் உட்கருத்தும் தளரவில்லை.

படித்தவற்றிலிருந்து இவற்றை எல்லாம் உணர்ந்து கொண்டு இளங்குமரன் தலை நிமிர்ந்தபோது பொழுது புலர்ந்து மாடங்களின் வழியே ஒளிக்கதிர்கள் பாய்ந்து கொண்டிருந்தன. வெளியே தாழிட்டிருந்த கதவுகளும் அதே வேளையில் திறந்தன. திறந்த கதவுகளுக்கு அப்பால் அவன் ஒரு புதிய காட்சியைக் கண்டான்.

8. கருத்தில் மூண்ட கனல்

கிளர்ந்த உணர்வுகளும் விம்மிப் பூரிக்கும் தோள்களுமாக இளங்குமரன் எதிரே பார்த்தான். மணிநாகபுரத்து மாளிகையின் ஓவியமாடத்து அறையிலிருந்து நேர்கீழே தணிவாகத் தென்பட்ட முற்றத்தில் எமகிங்கரர்களைப் போன்ற தோற்றமுடைய முரட்டு நாகமல்லர்கள் ஐம்பது அறுபது பேர் - ஆயுத பாணிகளாக அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். போர்க் கோலம் புனைந்து கொண்டாற் போன்ற தோற்றத்தோடு குலபதியும் அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/76&oldid=1231688" இலிருந்து மீள்விக்கப்பட்டது