பக்கம்:மணி பல்லவம் 5.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா .பார்த்தசாரதி

859

அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு உட்பக்கம் திரும்பி ஓவிய மாடத்தை நோக்கினான். அங்கே மணிமார்பன் சில ஓவியங்களைப் பிரதி செய்து கொண்டு நிற்பது தெரிந்தது.

‘இந்தக் காரியங்கள் எல்லாம் இவ்வளவு விரைவாக நிகழ்வதன் நோக்கமென்ன?’ என்று இளங்குமரன் தனக்குள் சிந்திக்கத் தொடங்கியபோதில்,

“எதிரே நிகழ்கிறவற்றையெல்லாம் பார்த்தாய் அல்லவா?” என்று கேட்டுக்கொண்டே அருட்செல்வர் வளநாடுடையாரோடு அங்கு வந்து சேர்ந்தார். அவன் இப்போது புதிதாகத் தெரிந்துகொண்டவற்றால் அந்த முனிவருக்கு அதிக நன்றிக்கடன் பட்டிருந்தான்.

“எப்போதோ நிகழ்ந்து முடிந்தவற்றையெல்லாம் இந்த ஏடுகளில் பார்த்தேன். இப்போது நிகழ்கிறவற்றை என் எதிரே பார்க்கிறேன். இழந்தவற்றுக்காக வேதனைப்படுகிறேன். பெற வேண்டியவற்றுக்காகக் கிளர்ச்சி அடைகிறேன். இவ்வளவையும் தெரிந்துகொண்டபின் உங்கள் மேல் என் நன்றி பெருகுகிறது. என்னை வளர்த்து ஆளாக்கிய காலத்தில் என்னை வளர்ப்பதைத் தவிர வேறு தவங்களைச் செய்ய மறந்திருக்கிறீர்கள் நீங்கள். இது பெரிய காரியம். இதற்குக் கைம்மாறு செய்ய எனக்குச் சக்தியில்லை” என்று முனிவரை நோக்கி அவன் நாத்தழுதழுக்கக் கூறினான். முனிவர் அவன் அருகில் வந்து அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பேசலானார்:-

“கைம்மாறு எதிர்பார்த்துக்கொண்டு நானும் இவற்றையெல்லாம் செய்யவில்லையப்பா, இன்று உன்மேல் நான் கொண்டிருக்கிற இதே அபிமானத்தை உன் தந்தை அமுதசாகரன் வாழ்ந்த காலத்தில் அவன் மேலும் கொண்டிருந்தேன். உன் தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கொடுந்துன்பங்கள் என்னை பற்றும் பாசமும் உள்ள வெறும் மனிதனாக்கிவிட்டன. அந்தக் கணத்திலிருந்து நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/77&oldid=1231807" இலிருந்து மீள்விக்கப்பட்டது