பக்கம்:மணி பல்லவம் 5.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

864

மணிபல்லவம்

துடிக்கக் கொன்றுவிட்டதாகத் திருப்திப்படலாம். இதோ அவரைப் போலவே அரும்பு மீசையும் அழகிய தோற்றமுமாக விளங்கும் குலபதியின் முகத்தில் தெரிகிற கவர்ச்சி அவரைத்தானே நினைவூட்டுகிறது, என் தாய் மாமனுடைய ஓவியத்தை இந்த மாடத்தில் பார்த்தபோது ஒரு தொடர்பும் தெரியாமலே குலபதியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன் நான். மனிதன் பிறரையும் பிறருடைய எண்ணங்களையும் கொல்ல முடியும். அந்த எண்ணங்களும் அதே எண்ணங்களைக் கொண்ட புதிய பரம்பரையும் தோன்றுவதைத் தடுக்க முடியாது. இவற்றையெல்லாம் அறியத் தவித்துத் தவித்து அந்த அறியும் ஆசையே என்னுடைய கருத்தில் கனன்று கொண்டிருந்த காலத்தில் இவை எனக்குத் தெரியவில்லை. குருகுல வாசம் செய்து ஞானப்பசி தீர்ந்து, கல்வியினாலும் தத்துவ மயமான எண்ணங்களாலும் அந்தக் கனல் அவிழ்ந்துபோய் மனத்தில் அது இருந்த இடம் குளிர்ந்திருக்கும் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இத்தனை காலமான பின்பும் அது அழியாமல் நீறுபூத்த நெருப்பாக அடிமனத்தில் என்னுள் எங்கோ எரிந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு காலம் எப்படி எவருக்குக் கடமைப்பட்டிருந்தாலும் தாம் ஒரு துறவி என்ற நினைப்பை இழந்துவிடாமல் ஒரே ஒரு கணத்தில் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டு அருட்செல்வர் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார் பார்த்தீர்களா? அப்படி என்னால் போக முடியவில்லை என்பதை உணரும்போதே நான் ஏதோ ஒருவிதத்தில் பக்குவப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பக்குவத்தை அடைவதற்கு இந்தச் சோதனையை நான் ஏற்றுக்கொள்வது அவசியம்தான். ஆனால், இந்தச் சோதனையில் நான் தனியாகப் புகுந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறேனே ஒழியப் பிறருடைய துணைகளை விரும்பவில்லை. குலபதியின் இரகசியப் படையிலிருக்கிற மல்லர்களும், குலபதியும் நம்மோடு, பூம்புகாருக்கு வரவே கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/82&oldid=1195295" இலிருந்து மீள்விக்கப்பட்டது