பக்கம்:மணி பல்லவம் 5.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

865

நான் ஒரு கவியின் மகன். கவிகள் வார்த்தைகளாலேயே பிறருடைய உணர்ச்சிகளையும் மனத்தையும் வென்றுவிடும் சத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய சொற்களே அவர்களுக்குப் பெரிய ஆயுதங்கள். நான் என்னுடைய குலப்பகைவனைத் தனியே நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன். அப்படிச் சந்திக்கப் புறப்படுவதற்காக இன்று மாலைவரை தாமதம் செய்ய வேண்டியதுகூட அநாவசியம். நான் இந்த விநாடியே புறப்படுகிறேன்” என்று கூறிக்கொண்டே தன் தாயின் ஓவியத்தருகே இருந்த ஏடுகளையும், தான் முதல் நாளிரவு படித்திருந்த ஏடுகளையும் எடுத்துக்கொண்டு சில சித்திரங்களைப் பிரதி செய்துகொண்டிருந்த மணிமார்பன் அருகே சென்றான் இளங்குமரன்.

அவன் அதுவரை கூறியவற்றைக் கேட்டு மனக்குழப்பம் அடைந்திருந்த குலபதி, “ஐயா! இதென்ன என்னுடைய அத்தையின் அருமைப் புதல்வர் திடீரென்று இப்படி எல்லாத் திட்டங்களையும் மாற்றுகிறாரே! என்னையும் நான் இத்தனை காலமாக இந்தக் காரியத்திற்காகவே சோறிட்டு வளர்த்த இந்த மல்லர்களையும் பூம்புகாருக்கு வரக் கூடாதென்கிறாரே இவர்? என் அத்தையும் அவள் நாயகரான கவிஞர் அமுதசாகரும் என் தந்தையாரும் அந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைச் செல்வரிடம் போய்த் தனிமையில் உயிரைப் பறிகொடுத்த வேதனைகள் போதாதென்று இவரும் போய் அப்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று கலக்கத்தோடு வளநாடுடையாரிடம் கூறினான்.

“அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது குலபதி ! இளங்குமரனுக்குச் சிறுவயதிலிருந்தே இப்படிப் பிடிவாத குணம் உண்டு. நடுவில் ஒடுங்கியிருந்த அந்தக் குணம் இப்போது மறுபடி மெல்லத் தோன்றுகிறதோ என்னவோ? எப்படி இருந்தாலும் நீ இப்போது அவன் சொற்படியே நடந்துகொள்வதுதான் நல்லது. நானும் மணிமார்பனும் எப்படியும் அவனோடு பூம்புகாருக்குச் செல்வோம்.

ம-55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/83&oldid=1231812" இலிருந்து மீள்விக்கப்பட்டது