பக்கம்:மணி பல்லவம் 5.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

867

அங்கே சூழ்ந்து நின்ற எல்லாருடைய மனங்களும் தவித்துக் குமுறி மெளனமாகவே உள்ளுக்குள் அழுதன.

தயங்கி நின்ற இளங்குமரன் மெல்ல நடந்து போய்க் கண்கலங்கி எதிரே நின்றுகொண்டிருந்த குலபதியைத் தோளோடு தோள் சேரத் தழுவிக்கொண்டு அவனை நோக்கிப் புன்சிரிப்புடனே சொல்லலானான்:

“குலபதி என்னுடைய பசி மிகவும் பெரியது. அது மிக நீண்ட காலத்துப் பசி, பல பிறவிகளாக நிறையாமலே வருகிற பசி. அதன் ஒரு பகுதி திருநாங்கூரில் நான் குருகுல வாசம் செய்தபோது நிறைந்தது. இன்னொரு பகுதி பூம்புகாரில் சமயவாதிகள் அணிவகுத்து நின்ற ஞான வீதியில் அவர்களை நான் சந்தித்து வென்றபோது நிறைந்தது. இன்னொரு பகுதி இந்தத் தீவுக்கு வந்து என் குடிப்பிறப்பைப் பற்றி நான் தெரிந்துகொண்ட பின்பு நிறைந்தது. இனி மீதமிருக்கிற பசியும் நான் பூம்புகாருக்குப் போனவுடன் நிறைந்துவிடும். இந்த முறை என் பிறவி முழுமையடைந்துவிட வேண்டுமென்று நான் இடைவிடாமல் மனத்திற்குள்ளேயே விடுபட்டுப் பறப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடம்பில் அதிகமான சக்தியும் இரக்கமும் ஓடி நான் யாரைச் சந்தித்து,நியாயம் கேட்க வேண்டுமோ அவரிடம் என் அந்தரங்கத்துக்கு மாறாக நடந்துகொண்டுவிட நேருமோ என்ற பயத்தினால் அந்தச் சோதனை முடிகிறவரை விரதமிருக்க எண்ணுகிறேன். ஆகவே என்னை உண்பதற்கு அழைக்காதே. எனக்கு விடை கொடு.”

“இந்த மாளிகையும் இதன் செல்வங்களையும் ஆள வேண்டியவன் நான் என்று நீ கூறுகிறாய். என்னுடைய சிறு பருவத்திலிருந்தே இந்த வகையான செல்வங்கள் மதிப்புள்ளவையாக எனக்குத் தோன்றவில்லை. நான் தவச்சாலையில் ஒரு முனிவருடைய வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்தத் தவச்சாலையும் பூம்புகாரின் மயானத்தருகே அமைந்திருந்தது. மனிதனுடைய ஆசைகளும், நினைவுகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/85&oldid=1231814" இலிருந்து மீள்விக்கப்பட்டது