பக்கம்:மணி பல்லவம் 5.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

868

மணிபல்லவம்

கனவுகளும் நம்பிக்கைகளும் அழிந்து மண்ணோடு கலந்து விடுகிற பூமியில் நடந்து நடந்து அந்த மண்ணின் குணமே எனக்குப் படிந்துவிட்டதோ என்னவோ? எனக்காகப் பிறரை அநுதாபப்பட விடுவதுகூட என் தன்மானத்துக்கு இழுக்கு என்று கருதி மானமே உருவாக நான் நிமிர்ந்து நின்ற நாட்களும் என் வாழ்வில் உண்டு.'எல்லோருக்காகவும் எல்லா வேளைகளிலும் அநுதாபப்படும் மனம் தான் ஞானபூமி’ என்று நானே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தனது எண்ணத்தில் தவம்செய்த நாட்களும் என் வாழ்வில் உண்டு. என்னுடைய வாழ்க்கையே ஒவ்வொரு பருவத்திலும் எனக்குப் பாடமாக வாய்த்திருக்கிறது. ஆனால் எல்லாப் பருவத்திலும் சேர்ந்து நான் மொத்தமாக அலட்சியம் செய்த ஒரு பொருள் செல்வமும் சுகபோகங்களும்தான். துக்கமயமான அநுபவங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி எந்த வேளையிலும் நெருப்பில் இளகும் பொன்னாக ஒளிர வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று தன் மனத்தைத் திறந்து பேசினான் இளங்குமரன்.

மேலே ஒன்றும் கேட்கத் தோன்றாமல் குலபதியின் நாக்கு அடங்கிவிட்டது. வளநாடுடையாரும், மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் உடன்வர இளங்குமரன் அன்று நண்பகலில் பூம்புகாருக்குக் கப்பலேறினான். சங்குவேலித் துறைக்கு வழியனுப்ப வந்திருந்த குலபதி இளங்குமரனுக்கு விடைகொடுக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டான்.

“ஐயா! என் அத்தையின் புதல்வராகிய நீங்கள் உங்கள் வாழ்வின் ஒரு பருவத்தில் முரட்டு வீரராக வாழ்ந்திருக்கிறீர்கள்! மற்றொரு பருவத்தில் கல்விக் கடலாகப் பெருகியிருக்கிறீர்கள். பின்பு ஞானியாக நிறைந்திருக்கிறீர்கள்! இறுதியில் நெருப்பிலே இளகும் பொன்போலச் சான்றாண்மை வீரராக உயர்ந்திருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் என் குடும்பப் பெருமையாக நான் எண்ணிப் பூரிக்கிறேன். ஆனால் மறுபடி எப்போது உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்து சேரப் போகிறீர்கள்? வேற்று மனிதர் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/86&oldid=1231815" இலிருந்து மீள்விக்கப்பட்டது