பக்கம்:மணி பல்லவம் 5.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

871

வணங்கிவிட்டுச் சிறிது நேரம் வாயிலில் நின்றபடியே அவரிடம் பேசிக்கொண்டிருந்த பின்பு உள்ளே சென்றான். அவனைப் பின்தொடர்ந்தாற்போல் ஓவியனும் அவன் மனைவியும்கூட உள்ளே சென்றுவிட்டார்கள். வளநாடுடையார் மட்டும் நீலநாக மறவரிடம் ஏதோ தனியாகப் பேச விரும்புகிறவர் போல் நின்றார். அவர் நிற்கும் குறிப்பு நீலநாகருக்குப் புரிந்துவிட்டது. உடனே “என்ன வளநாடுடையாரே! இந்தப் பிள்ளை ஏன் இப்படிக் கலங்கிக் கறுத்துப் போயிருக்கிறான்?” என்று நீலநாகர் இளங்குமரனைப் பற்றி அவரைக் கேட்டார்.

“நாமிருவரும் பேசிக்கொண்டே போகலாம். நீங்கள் கோவிலுக்குப் புறப்படுமுன் ஆலமுற்றத்து மரத்தடியில் உங்களோடு சிறிது நேரம் நான் தனியாகப் பேச வேண்டும்” என்றார் வளநாடுடையார். நீலநாகரும் அதற்கு இணங்கிய பின் இருவரும் நடந்தனர்.

கடலருகேயுள்ள ஆலமுற்றத்துக் கரையில் மரகதத் தகடு வேய்ந்து பசும் பந்தலிட்டது போலப் பரந்திருந்த ஆலமரத்தின் கீழே மணற்பரப்பில் வளநாடுடையார் நீலநாகரோடு அமர்ந்துகொண்டார்.

“நீலநாகரே! இதுவரை உங்களிடம் மாற்றிச் சொல்லியிருந்த பொய் ஒன்றை இப்போது உண்மையாகவே வெளியிட நேருகிறது. அதறக்காக முதலில் நீங்கள் என்னைப் பொருத்தருள வேண்டும். அருட்செல்வ முனிவர் இறந்து போய்விட்டதாக நான் நீண்ட நாட்களுக்கு முன்பு உங்களிடம் வந்து கூறியது பொய். அவர் மணிபல்லவத் தீவில் உயிரோடு வாழ்ந்து வருகிறார். இளங்குமரன் இந்தப் பயணத்தின்போது அவரைச் சந்தித்தான். தன் பிறப்பைப் பற்றிய பல உண்மைகளை அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். முனிவர் எனக்கும் அவற்றைக் கூறினார்.” என்று தொடங்கிச் சொல்லிக் கொண்டே வந்தார்.

தாம் சொல்லியவற்றால் நீலநாகருடைய முகத்தில் என்ன மாறுதல் விளைந்திருக்கிறதென்று அறிய விரும்பியவராகப் பேச்சை நிறுத்திக் கொண்டு அவர் முகத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/89&oldid=1231818" இலிருந்து மீள்விக்கப்பட்டது