பக்கம்:மணி பல்லவம் 5.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

873

பிள்ளை இளங்குமரன் இப்படி அமைதியாயிருக்கிறான்? பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய மறுகணமே அந்தப் பெருமாளிகைக்குப் போய்ச் சூறையாடியிருக்க வேண்டாமோ ?”

“நீங்களாகவோ நானாகவோ இருந்தால் அப்படிச் சூறையாடியிருப்போம் நீலநாகரே! இளங்குமரனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எந்த நோக்கத்துடனோ அவன் பெரிதும் அமைதியாயிருக்கிறான். ‘உன் கடமைகளை உனக்கு நினைவுபடுத்தியாயிற்று. இனி நான் என் வழியில் போக வேண்டும். சமந்தகூடத்துக் காட்டில் போய்த் தவத்தில் மூழ்கப் போகிறேன். எனக்கு விடை கொடு என்று அருட்செல்வ முனிவரும் மணிநாகபுரத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். இந்தப் பிள்ளையின் தாய்மாமன் மகன் குலபதி பட்டின பாக்கத்துப் பெருநிதிச் செல்வனைப் பழிவாங்குவதற்காக ஒரு படையே திரட்டி வைத்திருந்தான். அவனையும் அவன் படைகளையும்கூடத் தன்னோடு வரக் கூடாதென இவன் மறுத்து விட்டான். மணிநாகபுரத்திலிருந்து கப்பலில் திரும்பி வரும்போது ‘மேலே செய்ய வேண்டியவைகளைப் பற்றி இனி என்ன திட்டம்?’ என்று கேட்டுப் பலமுறை நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். இவன் அப்போதெல்லாம் நன்றாக முகம் கொடுத்துப் பேசவில்லை. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குப் போவதாயிருந்தால் தனியாகப் போகாதே, உன்னோடு ஓவியனையும் துணையாய் அழைத்துக்கொண்டு போ’ என்று இங்கு வந்து கரை சேர்ந்ததும் கூறினேன். அதற்கும் மறுமொழி கூறாமல் மெளனமாயிருந்துவிட்டான். கருணை, பரிவு, சாந்தம் என்றெல்லாம் இந்தப் பிள்ளை வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்குத் தயக்கமாயிருக்கிறது. கொலை பாதகங்களுக்கும் அஞ்சாத எதிரியிடம் இவன் வெறுங்கையோடு போய் நிற்கப் போகிறானே என்று எண்ணினால்தான் எனக்குப் பயமாயிருக்கிறது. இதைத்தான் உங்களிடம் தனிமையில் சொல்ல விரும்பினேன். இன்று பகலிலோ, மாலையிலோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/91&oldid=1231820" இலிருந்து மீள்விக்கப்பட்டது