பக்கம்:மணி பல்லவம் 5.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

874

மணிபல்லவம்

இளங்குமரன் பட்டினப்பாக்கத்திற்குப் புறப்பட்டால் அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்படியாவது நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாகப் பின்தொடர வேண்டும். இந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுத்து விட்டேன். இனி நான் நிம்மதியாகப் புறவீதியில் என்னுடைய இல்லத்திற்குச் சென்று என் மகளைப் பார்த்து இளங்குமரன் திரும்பி வந்திருக்கிற செய்தியை அவளுக்குச் சொல்லலாம். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற செய்தியாயிருக்கும் இது” என்று சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வளநாடுடையார்.

“உங்களுக்கு இதைப்பற்றிய பயமே வேண்டாம், வளநாடுடையாரே! எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி வளநாடுடையாருக்கு விடை கொடுத்து அனுப்பினார் நீலநாகர்.

பின்பு கோவிலுக்குப் போய் வழிபாட்டை முடித்துக் கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினார். ஓவியன் மணிமார்பனை மட்டும் தனியே அழைத்து, “நான் படைக்கலச் சாலையின் உட்புறம் இளைஞர்களுக்கு வாட்போர் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பேன் தம்பீ! உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும். நீ இளங்குமரனை அருகிலிருந்து கவனித்துக் கொண்டேயிரு. அவன் எங்காவது வெளியேறிச் சென்றால் உடனே அதை நீ என்னிடம் வந்து சொல்ல வேண்டும்” என்று கூறி அவனிடம் வேண்டிக்கொண்டு படைக்கலச் சாலையின் உள்ளேயிருந்த தோட்டத்துப் பக்கமாகச் சென்றார் நீலநாக மறவர். படைக்கலச் சாலையில் அதன் பின்பு அன்று மாலைப் போது அமைதியாகக் கழிந்தது.

மணிமார்பன் இளங்குமரனுக்கு அருகிலேயே இருந்தான். இளங்குமரன் அன்று உணவு உண்ணவில்லை, ஏழெட்டு முறை திரும்பத் திரும்ப குளிர்ந்த தண்ணிரில் மூழ்கி நீராடிவிட்டு வந்தான். மெளனமாக உட்கார்ந்து தியானம் செய்தான். சிறிதுபோது ஏதோ உள்முகமான ஆனந்தத்தில் ஈடுபட்டபோது அவன் இதழ்கள் சிரித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/92&oldid=1231821" இலிருந்து மீள்விக்கப்பட்டது