பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலத்திலே பிறந்திருந்தாலும் உயரிய ஒழுக்கத்தினால் வைசிய, அந்தணக் குலங்களுக்கு நிகராக முடியும். அவ்வாறு நிகராகுங்கால் அரசும், சமுதாயமும் அதனை ஏற்றுப் போற்றவேண்டும். (சருவிலகன் வசந்தசேனைக்கு முக்காடிட்டு வது எனச் சிறப்பித்தலையும், சாருதத்தன் மனைவி தூதை என் தங்கை என்று கூறி ஏற்றுக் கொள்வதையும் காண்க) 4. அடிமை முறை அகற்றப்படல் வேண்டும். (மதனிகை போன்றோர் விடுவிக்கப்படுதல்) அரசர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்த அந்த நாளில்தான் நாட்டையே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற இக்கருத்துக்களை பதினாறு நூற்றாண்டுகட்கு முன்பே சூத்திரகன் தன் நாடகத்தில் வெளிப்படுத்தினான் என்பது வியப்புறுத்துவதாக உள்ளது. - வணிக குலத்தைக் காப்பியத் தலைமையாக்கி, கணிகையர் குலப்பெண்ணைக் கற்பரசி என்று காட்டி மேட்டுக்குடி வாழுநரின் கதைகளுக்கு விடுமுறையளித்த இளங்கோவடிகள்கூடச் சூத்திரகன் செய்த புரட்சியைச் செய்ய முடியவில்லை. மாதவியைக் கற்பரசியாகத்தான் படைக்க முடிந்ததே தவிர அவளைச் சோழ அரசும், பூம்புகார் வணிகர்களும், கோவலன் மனைவி கண்ணகியும் மாதவியைக் குலமகளாக ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்று காட்ட இளங்கோவடிகளால் முடியவில்லையே. இதனால்தான் சிலம்பையும் விஞ்சும் சித்திரமாக இம்மண்ணியல் சிறுதேர் விளங்கக் காண்கிறோம். இந்நாடகத்தை ஆய்வு செய்ய முனைந்த கவிஞர் மீரா அவர்கள் புறம், அகம், அகப்புறம் எனப் பாகுபாடு செய்துள்ளமை பாராட்டற்குரியது. 10