பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் I 47

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்

விடையால் எனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவளுண் மெலிவே

(பதிகம் 154 பாடல் 1)

என்னும் பாடலைப்பாடி திருமருகலில் குடிகொண்ட ஈசனை வணங்கினார். பெண் இவளின் மெலிவை நீடித்தல் தகுமோ?’ என்ற சம்பந்தரின் வினாவினால் கட்டுண்ட சிவபெருமான் இவ்வணிகனின் விடத்தைத் தீர்த்து அவனுக்கு உயிரளித்தான். பின்னர், சம்பந்தர் அவ்விருவருக்கும் மனம் முடித்து வைத்தார். அவர்கள், ஆளுடைய பிள்ளையாம் நம் சம்பந்தர் பெருமானைப் போற்றி, வணங்கி விடை பெற்றனர். இவ்வாறு, சென்ற உயிரை மீட்டுத் தருகின்ற ஆற்றல் வாய்ந்த அருளாளராக ஞானசம்பந்தப் பெருமான் விளங்கியமை புலனாகின்றது.

திருஞான சம்பந்தரின் இறை நம்பிக்கைக்கு மற்றுமொரு சான்றாக அவர் பாடிய கோளறு பதிகத்தைக் குறிப்பிடலாம். சோழநாட்டுத் திருப்பதிகளில் தொண்டாற்றி வந்த சம்பந்தரை, பாண்டிய நாட்டு ஒற்றர் சிலர் சந்தித்து, எங்கள் நாட்டில் சைவ நெறி அருகி சமணம் ஓங்கியிருக்கின்றது; நீங்கள் அருள்கூர்ந்து பாண்டி நாட்டிற்கு எழுந்தருள வேண்டும். இது எங்கள் அரசியார் மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் இணைந்து விடுத்த வேண்டு கோள். நீங்கள் தவறாது எழுந்தருள வேண்டும்’ என்று பணிந்துரைத்தனர். சம்பந்தரும் அவருடனிருந்தோரும் அவ் வேண்டுகோளினைஏற்றனர். அப்பொழுது அங்கிருந்த திருநாவுக்கரசு சுவாமிகள், சம்பந்தரை நோக்கி, பாண்டி நாட்டிற்குச் செல்ல இது தருணமன்று கோள் நிலையும் சரி இல்லை என்றார். அதற்கு, ஞானசம்பந்தர் நம்மைக் காப்பது சிவபெருமான் அருள். நாம் போற்றுவது அவனது திருவடி கள். நம்மை நாளும் கோளும் என்ன செய்யும்’ என்று வினவும் வகையில் ஒரு பதிகம் பாடினார்.