பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 21

ஒன்றாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நெடிய வரலாற்றையுடைய நம் மொழியின் இலக்கியங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு வளத்தை நயம்பட நவின்றுள்ளன. அவ்விலக்கியங்களுள் சங்க இலக்கியம் முதன்மையுடையது. அதன்கண் உணர்த்தப் பெறும் பண்பாட்டுச் சிறப்பை இவண் நோக்கலாம்.

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் தொன்மையும் பழமையும் வாய்ந்தது; பண்பாட்டின் நிலைக்களனாய் விளங்குவது; பண்பாடு என்பதற்கு மிகப் பொருத்தமான விளக்கத்தை அளிக் கின்றது. கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை'யில்,

பண்பெனப் படுவது பாடறிந்தொழுகுதல் என்னும் தொடர் ஆளப் பெற்றுள்ளது. பிறர்தம் இயல்பும் மனப்போக்கும் கண்டுணர்ந்து மதித்து அதற்கியைய நடந்து கொள்ளலே பண்பாகும் என்னும் இவ்விளக்கம் அருமையும் தெளிவும் உடையது. இத்தகு பண்பைப் பேணும் பெருமக்கள் இருப்பதாலேயே உலகம் நிலைத்திருக்கின்றது. இதனை,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு வாய்வது மன்’

என வள்ளுவப் பெருந்தகை தம் ஈரடிச் செய்யுளில் இயம்புதல் நோக்கத்தக்கது. சங்க இலக்கிய நூல்கள் அக்காலச் சான்றோரின் பண்பாட்டுச் சிறப்பை எடுத்து மொழிந்திருப்பதன் மூலம் தமிழினத்தின் தனித்தன்மை ஏற்றம் பெற்றிருக்கின்றது; உலக அரங்கில் உயர்பேரிடத்தில் வைத்துப்போற்றத் தக்க நிலையை எய்தியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் தமிழ்ச் சமுதாயம் போற்றிய பண்பாட்டுக் கூறுகளுள் சிறந்தவற்றை, உயரியவற்றை அடுத்துக் காணலாம் .