பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 27

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு உவலைக் கூவற் கீழ் மானுண்டு எஞ்சிய கலிழி நீரே’

என்னும் பகுதியால் விளங்கிக் கொள்ளலாம். தன்னிடமுள்ள தேன் கலந்த பாலைவிட, தலைமகன் நாட்டில் சிறுகுழியில் தேங்கியுள்ள தூசி படிந்த மான்கன்றுகள் குடித்து எஞ்சிய நீர் இனிமையானது என மொழிவதில் தலைமகனை மட்டு மல்லாமல் அவனது நாட்டையும் நேசிக்கும் அவளது பரந்த உளப்போக்கினை நினைந்து மகிழ்தல் சாலும். தன்பால் அன்பு செலுத்துபவன் என்கிற ஒரே காரணத்தால்-அந்தப் பிணைப்பு தருகின்ற மகிழ்ச்சியால், அவளது உள்ளம் தலைமகனை அவாவுதலோடு அவனைச் சேர்ந்த நாடு, நகரம் , காடு, மலை, உற்றார், சுற்றம் ஆகிய யாவற்றையும் அவாவி நிற்கின்றது, அவற்றையெல்லாம் இனியனவாகக் கருதிப் பெருமிதம் கொள்கின்றது. இத்தகு மனவளர்ச்சி யினை, மனச் செம்மையினை மிக எளிய முறையில் இயல்பான மொழிநடையில் எடுத்துரைக்கும் சங்க இலக்கியத்தைக் காலத்தை வென்ற கருவூலம் எனல் தகும்.

அடுத்து, பழந்தமிழ் மகளிரின் கற்பெனும் பண்பு போற்றத் தக்கதாய் உள்ளது கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்பதாம். அகவாழ்வில் தலைமகன், தலைமகளை விட்டுப் பிரிய நேர்கையில் ஒரு குறிப்பிட்ட பருவத்தைச் (காலத்தை) சொல்லி அதற்குள் வந்துவிடுவேன், அதுவரை ஆற்றியிரு எனக் கூறிப்பிரிதல் மரபு. தலைமகளும் அவ்வாறே ஆற்றியிருப்பாள்; எனினும் தலைமகன் மாட்டுக் கொண்ட காதலுணர்வின் அழுத்தம் உடலிலும் உளப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தலால் ஊராரின் அலரஞ்சித் தலைமகளின் வரவை நினைந்து வருத்தம் மேலிடப் பேசுவாள். அவளது அந்தப் பேச்சுகளில் தலைவனிடத்து அவள் பூண்டிருக்கும் உரிமையும் நம்பிக்கை யும் தெற்றென வெளிப்படுகின்றன.