பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு 33

என்னும் பாடலடிகளின்வழி அறியலாம். குறுந்தொகைப் பாடலொன்றில் விருந்தினர் எவரேனும் வெளியில் தங்கி விட்டார்களா? என ஏவலர்களை அனுப்பி அழைத்து வந்து உபசரிக்கும் பண்புடைய நிலை இருந்தமை சுட்டப் பெறுகின்றது.

........................மாலைப் பலர் புகு வாயில் அடைப்பக் கடவுகர் வருவீர் உளிரோ வெனவும் வாரார் தோழில

என்பதில் பலர்புகு வாயில் என வரும் தொடர் குறிப்பிடத் தக்கது. நிறைய விருந்தினர்கள் வந்து செல்வதற்கேற்ற அகன்ற வாயில் என்பதை இத் தொடர் குறிக்கின்றது. பழந்தமிழர் விருந்தோம்புதலை ஒரு கடமையாகக் கருதிய பாங்கு இவண் நினைந்து மகிழத்தக்கது.

புறம் வீரம்

தமிழர் அகவாழ்வில் திளைத்து அருங்கடன் ஆற்றியது போன்றே புறவாழ்விலும் செம்மை குன்றாது சீருடன் வாழ்ந்தனர். அவர்தம் புறவாழ்வு வெஞ்சமர் விரும்பி வீரம் வளர்க்கும் வாழ்வாக அமைந்தது. வீரம் உடம்போடும் உயிரோடும் சேர்ந்து பிறந்த பண்பாக அக் காலத்தில் விளங்கியது. குழவியிறப்பினும் ஊன்றடி பிறப்பினும் அதனை வாளால் வெட்டிய பிறகே புதைத்தல் அக் காலத்தவர் வழக்கம், இறப்பு இயல்பாக நேரக்கூடாது; போரினால்தான் ஏற்பட வேண்டும் என எண்ணிய தன்மை, நோக்கத்தக்கது. அக் கால அரசியல் சமுதாயச் சூழ்நிலைகளுக்கு வீரம் வேண்டியிருந்தது. அது ஒரு பண்பாகக் கருதப்பெற்றது. வாழ்க்கையின் நிலைபேறு வீரத்தின் அடியாக உருவ்ெடு, கிறது என அக்காலத்தவர் நம்பினர். அதன் விளைவாகவே

மண்.-3