பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

புகழ்

மண்ணக மாந்தர் ஒவ்வொருவரும் புகழை நாடுதல் இயல்பு. நற்சிந்தை, நற்செயல், நற்பேச்சு ஆகியன மனிதன் புகழடைவதற்கு உதவுவன. பண்டைத் தமிழர் புகழுடை வாழ்வே வாழ விரும்பினர். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனரே என்னும் புறப்பாடலடி இதனை நிறுவும். புகழெனின் உயிரையும் தர முன் வந்தனர். அத்தகைய பண்பாளரின் இயல்புகளைப் புறநானூற்றுப் பாடலொன்று சித்திரிக்கின்றது:

உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ் தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவ தஞ்சி புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்! அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன் தாள் பிறர்க்கென முயலுங்ர் உண்மை யானே?

என்னும் இப்பாடலில் இவ்வுலகம் நிலை பெற்றிருப்பதன் காரணம் விளக்கப்பட்டுள்ளது. புகழுக்காகத் தம் மின்னு யிரையும் ஈயவல்ல சான்றோர்கள் நிலவுலகில் உள்ளனர். அவர்கள் உலகத்தையே பெறுவதாக இருந்தாலும் பழிச் செயல் புரியாதவர்கள்; அயர்ந்து விடாது உழைப்பில் ஆர்வம் செலுத்த வல்லவர்கள்; தன்னலம் கருதாது பிறர் நலம் பேணும் பெருந்தகையாளர்கள். அத்தகையோரின் அருங் குணப்பண்புகளே இவ்வுலகை அழியாது காக்கின்றன என்னும் கருத்து சாலப் பொருத்தமானது. அத்துடன் இப் பாடல்வழிப் பண்டைத் தமிழரின் பண்பாட்டுக் கோலத்தைத் தெள்ளிதின் உணர முடிகின்றது.