பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

இன்னாது என்றலும் இலமே மின்னோடு வானம் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திறங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே88

எனவரும் இப்பாடலின் ஒவ்வோரடியிலும் உயிர்ப்புடைய பண்புநலம் ஒளி வீசித் திகழ்கின்றது. உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்று சேரும் முறையைப் பெருவெள்ளத்தின் போக்கிற்கேற்பச் செல்லும் புணைக்கு ஒப்புமைப்படுத்திமிக அரிய ஆழமான கருத்தாயினும்-எளிமையாக உரைத் திருப்பதும் ஒரு பண்பு நலமேயாம். சங்க இலக்கியப் பாடல் கள் பலவும் தனித்தனியே உணர்த்துகின்ற பண்பாட்டுக் கூறுகள் யாவும் இப்பாடலில் ஒருங்கே அமைந்துள்ளன. எனவே இதனையே சங்க இலக்கியம் உணர்த்தும் பண்பாடு எனவும் கொள்ளலாம்.

முடிவுரை

பண்டைத் தமிழர்தம் பண்பாட்டு நிலைகள் அவர்களது அகவாழ்விலும் புறவாழ்விலும் பொலிந்து சிறத்தலை மேற்கண்ட கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன. சுருங்கக் கூறின் செம்மைநாடும் சிந்தை, மனித நேயம் போற்றல், பிறர்நலம் பேணும் பெற்றிமை, தன் நிலையிலிருந்து வழுவாமை, எவ்வுயிர்க்கும் இன்னருள் புரிதல் என்னும் நற்பண்புகளின் சிகரமாய் நந்தமிழ்ச் சான்றோர் வாழ்ந்து வாழ்வை வனப்புடையதாக்கினர். அச்சீரிய வாழ்வினைச் சங்க நூல்கள் நேரிய முறையில் எடுத்துமொழிவதை இயல்பாகக் கொண்டுள்ளன. சங்க இலக்கியம் முழுமையும் நாம் அலசிப் பார்க்கும் பொழுது கிடைக்கும் பேருண்மை இதுவெனலாம்.