பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

என்று பிறந்தவள் இவள் என்று இயம்ப முடியாத அளவிற்குக் காலத் தொன்மையும், சமயந்தொறும் நின்ற தையல் என்று சமயப் பொதுமையும் கொண்டவள் தமிழ்த்தாய். எனவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடியினரான தமிழர்கள் திங்களொடும் செழும்பரிதி தன்னோடும், விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும், கடலோடும் பிறந்த தமிழ்மொழியினை, அதன் தொன்மை நோக்கியும், பெருமை நோக்கியும் பெருமிதம் கொள்ளலாம். அப் பழம் பெருமையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் தமிழர்க்குப் பெருமை சேர்ந்துவிடாது. காலந்தொறும் தமிழ்மொழி புதுமை போர்த்தி நின்ற திறத்தினையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும் என்ற அவாக்காரணமாக இச் சிறு நூலினைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஆக்கி அளித் துள்ளேன்.

எட்டுக் கட்டுரைகளைக் கொண்டிலங்கும் இந்நூலில் முதலாவது கட்டுரையாக அமைந்திருப்பது சங்க இலக்கியம்’

என்னும் கட்டுரையாகும். சங்க இலக்கியம் ஒரு வாழைத் தோட்டம் என்பார் என் ஆசிரியப்பெருந்தகையாம் டாக்டர் மு. வ. அவர்கள். அச் சங்க இலக்கியத்தின் பாடு

பொருளாக அகமும் புறமும் அமைந்திருந்தாலும், பல்வேறு தரத்து மக்களின் மனவியல்புகளைப் புலப்படுத்துவனவாகச் சங்க நூல்கள் திகழ்கின்றன. அப்பொற்கால இலக்கியத்தின் புகழினைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ள பழந்தமிழ் மக்களின் ஒழுகலாறுகளை, நாகரிக மேம்பாட்டினை, பண்பாட்டுச் சிறப்பினைத் தெற்றெனத் தெரிவிக்கும் வண்ணம் சங்க இலக்கியம் திகழும் பான்மையினை முதற் கட்டுரை உணர்த்தி நிற்கின்றது. -