பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vil

போல் அக்காலச் சமுதாய நிலைகளைத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கும் திறலினை விளக்கிநிற்கின்றது. தலை மகளை நெஞ்சத்திரையில் எழுதிய தலைமகனின் நேர்த்திப் பண்பினை வெளியிடுவதாக அக் கட்டுரையில் செய்திகள் இடம்பெற்றிருக்கக் காணலாம்.

“தமிழ் அறநூல்கள் காட்டும் தமிழர் கல்வி என்னும் தலைப்பில் அமைந்த ஏழாவது கட்டுரை, சங்கநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பிற்கால அற நூல்கள் ஆகிய வற்றுள் இடம்பெற்றுள்ள செய்திகளைத் தொகுத்துக் கூறு கின்றது. தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்ற தெல்லாம் எற்றே இவர்க்கு நாம் என்று என்னும் குமர குருபர அடிகளாரின் வாக்கின் நுண்மை இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்னும் ஈற்றுக் கட்டுரைத் தலைப்பு, நூலின் பெயராகவும் அமைகின்றது. வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத்துறைவிளங்க, பூத பரம்பரை பொலிய, புனித வாய் மலர்ந்தழுத திருஞான சம்பந்தப் பெருமான் மக்கட்சமுதாயத்தை நோக்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்று புகன்றார். அவர்தம் வாழ்வுப் போக்கினை வகையுறக் காட்டி நிற்கிறது நூலின் இறுதிக்கட்டுரை.

எப்போதும் போல் இப்போதும் தமிழுலகு என்னுடைய இந்த நூலினையும் வரவேற்று மகிழும் என்னும் துணிபுடன் என் முன்னுரையினை முடிக்கின்றேன்.

சி. பா. “தமிழகம்’ 30-10-1989