பக்கம்:மதன கல்யாணி-1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+76 மதன கல்யாணி

என்றாள். அதைக் கேட்ட துரைஸானி, “இப்படியும் நடந் திருக்குமா?” என்று வியப்போடு கேட்ட வண்ணம், அந்த வரலாற்றை நம்பாதவள் போல சந்தேகமான பார்வையாகத் தனது தாயின் முகத்தை உற்று நோக்கினாள்.

ஆனால் கோமளவல்லியோ தனது தாய் கூறிய ஒவ்வொரு வாக்கியத்தையும் வேதவாக்கியமாக நம்பி, “என்ன ஆச்சரியம்! அந்த மனிதனுக்கு இவ்வளவு திமிரா” என்றாள்.

கல்யாணியம்மாள் தனது மூத்த குமாரியின் சந்தேகப் பார்வையைக் கவனித்தும் கவனிக்காதவள் போல நடித்து, “இது திமிர் மாத்திரமல்ல; அவனுடைய ஜாதிபுத்தி இது தாசிகளுக்கும் வேசிகளுக்கும் நடுவிலிருந்து பாட்டுப் பாடும் கேவலமான ஒரு மனிதனை நாம் உள்ளே சேர்த்து அவனிடத்தில் மிகவும் அன்பாக நடந்து பிரியமாகப் பேசினோம் அல்லவா, அதிலிருந்து அவன் ஏதோ சந்தேகமாக நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. நாயைக் குளிப்பாட்டி நடுவிட்டில் வைத்த மாதிரி அவன் செய்து விட்டான்” என்றாள்.

கோமளவல்லி, “இத்தனை மாத காலமாக, அவன் இங்கே வந்து விட்டுப் போன போதெல்லாம் பரம யோக்கியன் போல பயபக்தி மரியாதையாக நடந்து கொண்டதைப் பார்த்தால், அவன் நல்ல உத்தம குணமுடைய மனிதன் என்றல்லவா நினைக்கும்படியாய் இருந்தது. இத்தனை நாளும் இல்லாமல் இன்று மாத்திரம் அவனுக்கு என்ன கேடு வந்துவிட்டது” என்று மறுபடியும் வியப்பாகக் கூறினாள். -

அதைக் கேட்ட துரைஸானியம்மாள், “அவனுடைப் புத்திசாலித் தனமென்ன! அவனுடைய மரியாதை என்ன! அப்படிப்பட்ட மனிதனா இந்த அசட்டுக் காரியத்தைச் செய்யக் கூடியவன்! அவனுடைய சுய புத்தியோடு அவன் இப்படிப்பட்ட காரியம் செய்யக் கூடியவனல்ல என்பதை நான் உறுதியாகச் சொல்லு வேன். இன்று வீணை மண்டபத்திலிருந்து புறப்பட்ட பிறகு அவனுக்கு ஒருகால் கொஞ்சம் பைத்தியந்தான் உண்டாகி இருக்க வேண்டும்” என்று மறுபடியும் சந்தேகமாகப் பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/194&oldid=649637" இலிருந்து மீள்விக்கப்பட்டது