பக்கம்:மதன கல்யாணி-1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 179

நாம் சந்தேகப்படுகிறோம். அப்படி சந்தேகப்பட்டாலும், எல்லா வற்றிற்கும் திருப்திகரமான காரணம் சொல்ல முடியுமா? இதெல்லாம் காலக்கிரமத்திலே தான் நன்றாக விளங்கும். கேவலம் நம்முடைய பங்களாவில் குற்றேவல் செய்யும் பொன்னியைக் கண்டு அம்மாள் எவ்வளவு தூரம் பயப்படுகிறார்கள். அதன் காரணம் என்ன? இவைகளில் எல்லாம் ஏதோ ரகசியம் இருக்கிறது. இல்லாவிட்டால், இத்தனை மாதமும் இல்லாமல், இன்று வீணை மண்டபத்திலிருந்து, இடைநடுவில் அம்மாள் எழுந்து நமக்குத் தெரியாமல் சயன மாளிகைக்கு வரவேண்டிய காரணம் என்ன?

கோமளவல்லி:- அதிருக்கட்டும்; தான் வீட்டுக்குப் போவதாக அம்மாளிடம் சொல்லி விடும்படி உன்னிடத்தில் கேட்டுக் கொண்டு வெளியில் போன அந்த மனிதன், அம்மாளுடைய படுக்கை அறைக்கு ஏன் போனான்? அது அவனுடைய குற்றந் தானே?

துரைஸானி:- அவனாகப் போனானோ என்னவோ! அது யாருக்குத் தெரியும்? கச்சேரி முடிந்து அவன் போகும் போது அவனைச் சயன மாளிகைக்கு அழைத்து வரும்படி எவனாவது வேலைக்காரனிடம் அம்மாள் சொல்லி வைத்திருக்கலாம். அதை உத்தேசித்தே அம்மாள் முன்னாக மண்டபத்திலிருந்து எழுந்து போயிருக்கலாம். தலைநோவினால் எழுந்து போனதாக அம்மாள் சொல்லுகிறார்களே. உண்மையில் தலைநோவிருந்தால், அதை நம்மிடம் சொல்லிவிட்டு எல்லோரும் அறியப் போவதை விட்டு, எவருக்கும் தெரியாதபடி கபட்டுத்தனமாக ஏன் மறைந்து போக வேண்டும்? அதுவும் தவிர, இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தாயா? நாம் அம்மாளுடைய சயன மாளிகைக்குள் போன போது, அவன் வெளியில் ஓடினான் அல்லவா, அவனைப் பிடிப்பதற்கு அம்மாள் துரத்திக் கொண்டு போக வேண்டிய காரணம் என்ன? அப்படி உண்மையில் அவன் தாறுமாறாகப் பேசியிருந்தால், அவனை அதட்டி வெளியில் அனுப்பி இருக்க வேண்டும். அவன் வெளியில் போகாமல் அம்மாளைத் தொட முயன்றிருந்தால், அவனைப் பிடித்து தண்டிக்கும் பொருட்டு கூச்சலிட்டு, வேலைக்காரர்களை அழைத்திருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/197&oldid=649640" இலிருந்து மீள்விக்கப்பட்டது