பக்கம்:மதன கல்யாணி-1.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 மதன கல்யாணி

நுழைந்தனர். சிவஞான முதலியார் கட்டிலை நோக்கி சிறிது தயங்கி, பிறகு வேலைக்காரனது முகத்தைப் பார்த்து, “அம்மாளுக்கு நல்ல தூக்க சமயம் போலிருக்கிறது. நேற்று முதல் உடம்பும் சரியாக இல்லை என்று கேள்விப்பட்டோம். நாங்கள் சமீபத்தில் போகலாமா, பேச செளகரியப்படுமா என்று பார்; அதிகமாக நாங்கள் தொந்தரவு கொடுப்பதில்லை. இரண்டொரு வார்த்தையே பேச வேண்டும்” என்று பாலாம்பாளது செவியில் படும் வண்ணம் மிகவும் அன்பாகவும் நயமாகவும் பேச அப்போதே தனது உறக்கத்திலும், அயர்விலும் இருந்து தெளிவடைகிறவள் போல, பாலாம்பாள் திடீரென்று தனது சிரத்தை உயர்த்தி கண்களைத் திறந்து முற்றிலும் வலிமை இழந்த குரலில், “வாருங்கள் வாருங்கள் இப்படி வாருங்கள். இந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று மிகுந்த மரியாதை, பணிவு, அன்பு முதலியவை ஒழுக உபசரித்து அவர்களை வரவேற்ற வண்ணம், தனது சால்வையை அப்பால் தள்ளிவிட்டு, எழுந்திருக்க முயன்று பலவீனத்தினால் எழுந்திருக்க மாட்டாமல் தத்தளிப்பவள் போல நடித்து அரைப்பாகம் எழுந்தவள் திடீரென்று படுக்கையில் வீழ்ந்தாள். அவளது வார்த்தையைக் கேட்ட சிவஞான முதலியாரும், கல்யாணியம்மாளும் கட்டிலிற்கு எதிரில் வந்து, அங்கே கிடந்த இரண்டு ஆசனங்களில் அமர்ந்தனர். அந்தத் தருணத்தில், பாலாம்பாள் படுக்கையில் வீழ்ந்ததைக் கண்ட சிவஞான முதலியார் மிகுந்த கவலையும் உருக்கமும் காட்டி, “அம்மா! நீ எழுந்திருக்க வேண்டாம்; அப்படியே படுத்துக் கொண்டிரு; இந்த அகாலத்தில் நாங்கள் உனக்கு நிரம்பவும் சிரமம் கொடுக்கிறோம். நேற்று இரவில் கொள்ளைக்கார நாய்கள் உங்களை எல்லாம் மிகுந்த துன்பத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள் என்ற சங்கதி எங்களுக்குத் தெரியும், உடம்பு அசெளக்கியமாக இருக்கிற சமயத்தில் நீ எழுந்து உட்கார்ந்து எங்களுக்கு உபசாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. செளக்கியமாகப் படுத்துக் கொண்டபடியே இரம்மா” என்று தேனொழுகக் கூற, சிவஞான முதலியார் ஒரு பெருத்த குள்ளநரி என்பதை மிகவும் எளிதில் கண்டு கொண்ட பெண் குள்ளநரியான பாலாம்பாள், அவரதைக் காட்டிலும் அதிக நயமான குரலில், “ஆகா! நன்றாய் இருக்கிறதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/272&oldid=649780" இலிருந்து மீள்விக்கப்பட்டது