பக்கம்:மதன கல்யாணி-1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 269

இருந்தால் நீயும் இந்த விஷயத்தில் அவருடைய மனம் கோணாத படி அவருடைய அனுமதியைப் பெறக்கூடாதா? எங்களுக்காக நீ இந்த உதவி செய்யக்கூடாதா? எப்போதும் இரப்பதற்கே வாராத வர்கள் வந்துவிட்டால், அவர்களை வெறுங்கையோடு அனுப்புவது கண்ணியமாகுமா?” என்று மகா உருக்கமாக இறைஞ்சிக் கேட்க, பாலாம்பாள், “அவர் இதற்கு ஒருநாளும் இணங்கி வரமாட்டார். தன்னுடைய சம்சாரம் சந்தேகமான நடத்தையுள்ளவள் என்பதைக் கோர்ட்டின் மூலமாக உலகத்தார் அறிவதற்கு எந்தப் புருஷனாவது இணங்குவானா? அவர் இதற்கு இணங்குவதாக வைத்துக் கொண்டாலும், முதலில், நானே. இதற்குச் சம்மதிக்க மாட்டேன். பணம் அதிகமாகக் கிடைப்பதனால், அதன் பொருட்டு எப்படிப்பட்ட இழிவான காரியத்தையும் செய்யத்தக்க மனிதர் உலகில் எத்தனையோ பேர்கள் இருக் கிறார்கள். நான் அந்த வகுப்பைச் சேர்ந்தவள் அல்ல. என்னுடைய நல்ல நடத்தையும் தேக பரிசுத்தமுமே இணையற்ற ஆபரணம். அவைகளே பெருத்த செல்வம். உங்களுடைய பிள்ளை எழுதி என்னிடம் கொடுத்த பத்திரத்தை நீங்கள் படிப்பீர்களானால், என்னுடைய உண்மையான யோக்கியதை உங்களுக்கே தெரியவரும். அவர் எனக்கு எப்பேர்ப்பட்ட பெருத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார் தெரியுமா? அதைப் படித்தவுடனே, அதற்கு சம்மதித்து விடலாமா என்ற ஒர் எண்ணம் என் மனதில் உண்டாயிற்று. என்னைக் கலியாணம் செய்து கொள்ள ஒருவர் ஆசைப்பட்டு என்னைக் காப்பாற்றி வருகிறார் என்று சொன்னேன் அல்லவா. அவருக்கு நான் இன்னமும் முடிவான உறுதி செய்து கொடுக்கவில்லை; அதை மாற்றுவதென்றால் ஒரு நொடியில் மாற்றிக் கொள்ள எனக்கு அதிகாரம் இருக்கிறது. இருந்தாலும் எனக்கு அவரைக் கலியாணம் செய்து கொள்வதே உத்தமமாகத் தோன்றுகிறது. எப்படி என்றால், மகாராஜனுக்கு வைப்பாட்டியாக இருந்து மகோன்னத போகம் அனுபவிப்பதைவிட, பிச்சைக் காரனுக்கு வாழ்க்கைப்பட்டு சம்சாரி என்ற பெயரெடுப்பதே பெண் பிள்ளைகளுக்கு லட்சணம் என்பது என்னுடைய கொள்கை. ஆகையால், உங்களுடைய பிள்ளை எழுதிக் கொடுத்த பத்திரத்தைக்கூட நான் அலட்சியமாகப் போட்டுவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/287&oldid=649808" இலிருந்து மீள்விக்கப்பட்டது