பக்கம்:மதன கல்யாணி-1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மதன கல்யாணி

சந்தேகமில்லை. அது சொற்ப காலத்தில் படிப்படியாக மறைந்து போகும். உலகத்தில் வேறே எத்தனையோ அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுள் எவளையாவது கலியாணம் செய்து கொள்வது அவருக்கு எளிய காரியம். அதனால் அவருடைய ஆசை பூர்த்தியாகிவிடும்; நீ அவரைக் கலியாணம் செய்து கொள்ளாமல் போவதால், அவருக்குப் பிரமாதமான துன்பம் வந்துவிடும் என்று நினைக்கவே நியாயமில்லை. அவருடைய விஷயம் முற்றிலும் சிற்றின்ப ஆசையைப் பொருத்தது. எங்களுடையதோ பிரமாதமான விபத்தைப் பொருத்தது. அவரை நீ கலியாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்வதற்கு உனக்கு அதிகாரமிருக்கிறது; அப்படிச் செய்தால், உனக்கு எவ்வித மான இழுக்கும் உண்டாகாது; ஆனால் பெருத்த ஆபத்தில் இருக்கும் எங்களுக்கு, உன்னால் எளிதில் செய்யக்கூடிய இந்த உதவியை செய்ய மறுத்தால், அதனால் உனக்குப் பெருத்த பாவம் வந்து சம்பவிக்கும். நான் சொல்லும் தாரதம்மியத்தை நீ நன்றாக யோசித்துப் பார்” என்று, நியாயஸ்தலத்தில் வாதாடுவது போல நயமாக எடுத்துரைத்தார்.

அதைக் கேட்ட பாலாம்பாள் ஒருவாறு திருப்தி அடைந்தவள் போல நடித்து, “தாங்கள் சொல்வதும் நியாயமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பழைய அன்பு குறுக்கிட்டுப் போராடு கிறது. சரி; நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது போலிருக்கிறது. அக்கினி சாட்சியாகக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததற்கு, காகிதம் சாட்சியாகக் கலியாணம் நடக்கிறது போலிருக்கிறது; சரி, அவரவர்கள் கொடுத்து வைத்த அளவு தானே கிடைக்கும். தங்களுடைய விருப்பம் போலவே, நடந்து கொள்ளுகிறேன். ஆனால் என்னைக் கேவலம் வைப்பாட்டியைப் போல இழிவாக மதிப்பதாய் இருந்தால், நான் இதற்கு இணங்கவே மாட்டேன். எந்த விஷயமும் இந்தப் பத்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே நடக்க வேண்டும். அது உங்களுக்குச் சம்மதந்தானே” என்றாள். -

சிவஞான முதலியார்:- ஆகா தடையில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/300&oldid=649837" இலிருந்து மீள்விக்கப்பட்டது