பக்கம்:மதன கல்யாணி-2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 119

உன் முகத்தைப் பார்க்க, என் கண்கள் கூசுகின்றன. முகத்தைப் பார்; கண்களைப் பார்; அழகென்ன வேண்டியிருக்கிறது; அழகு! நடத்தை அழகில்லாதவளுக்கு உடம்பழகு இருப்பது ஆபத்தில் தான் கொண்டு போய்விடும் என்று சொல்லுவார்கள். அது நிஜமாகப் போய்விட்டது. குழந்தாய்! இந்தா! எங்கே என் முகத்தைப் பார்த்துப் பேசு; அந்தப் பையனிடத்தில் பேச்சோடு நிற்கிறாயா? அல்லது, உன் ஜென்மத்தை அடியோடு பாழாக்கிக் கொண்டாயா? நிஜத்தைச் சொல்லிவிடு; நீ உன்னுடைய தேகத்தை இன்னமும் கெடுத்துக் கொள்ளவில்லை என்பதை மாத்திரம் நீ எனக்கு உறுதிப்படுத்திக் கொடுப்பாயானால், ஆகா! உனக்கு, என்ன வேண்டுமானாலும் நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இந்த மாசத்துக்குள் நல்ல அழகான புருஷனாகப் பார்த்து உனக்குக் கலியாணம் செய்து வைக்கிறேன்; உன்னுடைய உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஆபரணங்களால் நிறைத்து, ஒரு வண்டி நிறைந்த பணத்தோடு உன்னை உன் புருஷனுடைய வீட்டுக்கு அனுப்புகிறேன்; எங்கே பொய் பேசாமல் முகத்தைப் பார்த்துச் சொல், கண்ணு!” என்று அன்பாகக் கடிந்து கூறினாள்.

முதலில் தனது தாயைக் கண்டவுடனே, அவள் தன்னை தண்டிப்பாளோ என்ற ஒரு பீதியினால், துரைஸானியம்மாள் ஆரம்பத்தில் சிறிது தளர்வடைந்து ஒடுங்கி நின்றாள். ஆனால் தனது தாய் தன்னிடத்தில் மிகவும் அன்பாகப் பேசி, நியாயம் எடுத்துச் சொல்லுவதைக் காணவே, துரைஸ்ானியம்மாளது மனதில் அவளது இயற்கையான துணிவும் மூர்க்க குணமும் தலை எடுக்கத் தொடங்கின. அவள் முறுக்காக நிமிர்ந்து தனது தாயைப் பார்த்து, “என்னை ஏன் இப்படித் தொந்தரவு செய்ய வேண்டும்? நீங்கள் எல்லோரும் செய்யாத எந்தப் பெருத்த குற்றத்தை நான் மாத்திரம் செய்துவிட்டேன். நான் இதுவரையில் என்னுடைய ஆசையை எல்லாம் அடக்கிக் கொண்டு ஒழுங்காகத் தான் நடந்து வந்தேன். அன்றைக்கு நீங்கள் மதனகோபாலனிடத்தில் நடந்து கொண்டதைப் பார்த்தவுடனே, எனக்கும் இப்படிச் செய்ய வேண்டும் போல இருந்தது; செய்துவிட்டேன். ஆனால், அவன் வீணை வாசிக்கிற மேளக்காரன், இவன் குமாஸ்தா, அவனைவிட இவன் மேலானவன் தானே!” என்று கூசாமல் மறுமொழி

கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/123&oldid=645861" இலிருந்து மீள்விக்கப்பட்டது