பக்கம்:மதன கல்யாணி-2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125

உள்ள தூரம் ஒரு மயிலுக்குள்ளாகவே இருந்ததாகையால், தான் ஒட்டமாக நடந்து அங்கே போய்த் தனது காரியத்தை முடித்துக் கொண்டு, அரை மணி நேரத்திற்குள் திரும்பி வந்துவிட வேண்டும் என்னும் ஆவல் கொண்டவனாய், அவன் மிகவும் துரிதமாக நடந்து சென்றான். சிற்றின்பத்தின் சுவையை அப்போதே முதன்முதலாகப் பருகி உணர்ந்தவன் ஆதலால், அவன் அப்போதும் சுவர்க்கலோகத்தில் இருப்பவன் போலத் தோன்றி, மெய்ம்மறந்து மோக வெறி கொண்டு, முற்றிலும் புதிய மனிதனாகக் காணப்பட்டான். துரைஸானியம்மாள் அவனிடத்தில் கொண்ட கரைகடந்த காதலினால் கொஞ்சிக் குலாவி ரதிகேளிவிலாச இன்ப சாகரத்தில் ஆழ்த்தி அவனது ஐம்புலன்களும் நிறைய அமிர்த வெள்ளம் பொழிந்து, அவனை ஒப்புயர்வற்ற ஆனந்த சுகத்தில் ஆழ்த்தியதான ஒவ்வொரு காட்சியும், அப்போதே நிகழ்வது போல, அவனது உணர்வில் அப்போதும் புலப்பட்டுக் கொண்டிருந்தமையால், அவன் இந்த மண்ணுலகத்தையே மறந்து ஏதோ ஒரு புதிய இன்ப உலகில் பறந்து செல்பவன் போல நடந்து கொண்டிருந்தான். துரைஸ்ானியம்மாளது கனிமொழிகள் அப்போதும் அவனது செவிகளுக்கருகில், புல்லாங்குழலின் இன்னொலி போலவும் கந்தருவ கானம் போலவும் கணிகணி என்று ஒலித்துக் கொண்டிருந்தன. திவ்ய தேஜோமயமான அவளது யெளவன ரூபம் அவனது மனம் முழுதிலும் நிறைந்திருந்ததுமன்றி, அவனது தேகத்தை அப்போதும் ஆலிங்கனம் செய்த வண்ணம் அவன் பார்க்கும் இடமெல்லாம் நின்று, அவனது மனதை மயக்கி, அறிவைக் கலக்கி, அவனது உள்ளம் உருகி நெகிழும்படி செய்தது. அவனது மனமாகிய உலகத்தில், அதுகாறும் திறக்கப் படாத ஒரு புதிய தெய்வ லோகத்தின் கதவு படீரென்று திறக்கப் பெற்றவன் போலத் தனது மனதில் எழுகடல் வெள்ளம் போலப் பொங்கி எழுந்து. தன்னை ஆழ்த்திய பேரின்ப வாரிதியில் மிதந்தவனாய், அவன் சென்று கொண்டிருந்தான்; தன்னை அப்படிப்பட்ட இணையற்ற சாயுஜ்ய பதவியில் ஒரு நொடிக்குள் ஆழ்த்திவிட்ட பெண்ணரசி யான துரைஸானியம்மாளது தாய் ஏவிய பணியைத் தான் நிறைவேற்றப் போவது பற்றி, அவன் கரை கடந்த உற்சாகமும், குதூகலமும், மகிழ்ச்சியும் அடைந்தவனாய் ஒடோடியும் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/129&oldid=645867" இலிருந்து மீள்விக்கப்பட்டது