பக்கம்:மதன கல்யாணி-2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 127

பிரிந்து வந்தவன் ஆதலால், அதே எண்ணங்கள் எழுந்தெழுந்து அவனது மனத்தை வளைத்துக் கொண்டிருந்தன. தான் வெகு சீக்கிரத்தில் மைலாப்பூரை அடைந்து, கடிதத்தைக் கொடுத்து மறுமொழி பெற்றுக்கொண்டு போய், கல்யாணியம்மாளிடத்தில் கொடுத்துவிட்டு, தனது மனதைக் கொள்ளை கொண்ட அதிசுந்தர ரதிதேவியான துரைஸானி என்னும் பொற்கொடியை இன்னொரு முறை காண்பதான பேரானந்த சுகத்தை அள்ளிப் பருகித் தனது காதல் விடாயை ஒரு சிறிது தணித்துக் கொண்டு அடையாற்றிற் கருகில் இருந்த தனது அக்காளைப் பார்க்கப் போவதாகக் கல்யாணியம் மாளிடத்தில் கூறி அனுமதி பெற்றுக்கொண்டு, தனது அக்காளிடத்திற்குப் போய் அவளது உதவியைக் கொண்டு, ரகசியமான ஒரு ஜாகையை அமர்த்திக் கொடுக்கச் செய்து, அதன் திறவுகோலை வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணமிட்டவனாய் மோகனரங்கன் சென்று கொண்டிருந்தான். திடீரென்று பெருத்த நிதிக்குவியலைக் கண்ட யாசகனைப் போல, அவன் தனக்கு அவ்வளவு பெருத்த பாக்கியம் திடீரென்று கிட்டியது மெய்யோ பொய்யோ என்று அடிக்கடி ஐயமுற்றவனாகச் சென்று, கால்மணி நேரத்தில் சிவஞான முதலியாரது வீட்டையடைந்து, தான் கல்யாணி யம்மாளிடத்தில் இருந்து அவசரமான ஒரு கடிதம் கொணர்ந் திருப்பதாக வெளியில் இருந்த ஒரு வேலைக்காரனிடத்தில் சொல்லி அனுப்ப, அவன், மேன்மாடத்தில் தனிமையில் இருந்து, ஒரு முக்கியமான வழக்கு சம்பந்தமான தஸ்தாவேஜிகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த சிவஞான முதலியாரிடம் போய், விஷயத்தைத் தெரிவிக்க, அவர் பையனை உடனே மேலே அனுப்பிவிட்டு வெளியிலேயே இருக்கும்படி அந்த வேலைக்காரனைக் கீழே அனுப்பினார்.

அவன் அவ்வாறே கீழே இறங்க, அடுத்த நிமிஷத்தில் மோகன ரங்கன் மிகுந்த சந்தோஷத்தினால் பூரித்து உற்சாகத்தைக் காட்டிய தேகத்தோடும், புன்னகையால் மலர்ந்த முகத்தோடும், அவருக் கெதிரில் வந்து நின்று, கடிதத்தை மேஜையின் மீது வைத்தான். அவனது உற்சாகத் தோற்றமும் சந்தோஷப் பார்வையும் வழக்கத் திற்கு மாறான புதிய சின்னங்களாக இருந்தமையால், அதை அதி சுலபத்தில் உணர்ந்து கொண்ட முதலியார் மிகுந்த வியப்பும்

up.5.ii-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/131&oldid=645871" இலிருந்து மீள்விக்கப்பட்டது