பக்கம்:மதன கல்யாணி-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 134

இரண்டு குமாஸ்தாக்களை வைத்திருக்கிறோம். அங்கிருக்கும் வேலை இரண்டு பேரால் பார்த்து முடியாததாக இருப்பதால், யோக்கியனும் சாமர்த்தியசாலியுமான இன்னொரு குமாஸ்தா வேண்டுமென்றும், உடனே அனுப்பும்படியாகவும் என்னுடைய தம்பி எழுதியிருக்கிறார். நீ மிகவும் நாணயமும் யோக்கியதையும் உள்ளவன் ஆகையால் உன்னைத்தான் அங்கே அனுப்ப வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இங்கே மாரமங்கலத் தார் உனக்கு சாப்பாடு போட்டு பதினைந்து ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். அங்கே உனக்கு சாப்பாடு முதலிய செலவுகளுக் காக 15-ரூபாயும், சம்பளம் 25-ரூபாயும், ஆகமொத்தம் நாற்பது ரூபாய் கொடுக்கும்படி எழுதி இருக்கிறேன். அங்கே நீ இரண்டு மாசகாலம் இருக்கும்படி நேரிடும்; அதன் பிறகு உன்னை இவ்விடத்துக்கே நான் அழைத்துக் கொள்ளுகிறேன். உடனே அனுப்பும்படி அவர் கடிதமெழுதி இருக்கிறார் ஆகையால், நீ அடுத்த ரயிலிலேயே புறப்பட்டுப் போய்ச்சேர்; உனக்கு வேண்டிய வஸ்திரங்களை எல்லாம் அவ்விடத்தில் உடனே வாங்கிக் கொடுக்கும்படி எழுதியிருக்கிறேன். இப்போது எனக்கு எழும்பூரில் கொஞ்சம் அலுவல் இருக்கிறது. என்னுடைய பெட்டி வண்டியிலேயே உன்னை உட்கார வைத்துக் கொண்டு போய், உன்னை ரயிலில் ஏற்றிவிட்டுப் போகிறேன். நீ அங்கே போய் ஒழுங்காகவும் பணிவாகவும் நடந்து கொள்வாய் என்று நான் நிச்சயமாக நம்பி இருக்கிறேன்” என்று கூறிய வண்ணம் எழுந்து, தமது உடைகளை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தார். அவரது சொற்களைக் கேட்ட மோகனரங்கன் கலகலத்துப் போய் பரமசங்கடத்தில் ஆழ்ந்தவனாய், என்ன மறுமொழி சொல்வதென் பதை உணராதவனாய், பட்ட மரம் போல அசைவற்று அப்படியே நின்றான்; துரைஸானியம்மாளது விஷயத்தில் தான் கட்டியிருந்த மானஸிகமான நவரத்னக் கோட்டை ஒரே கொடியில் இடிந்து தரைமட்டமானதையும், தான் அவளை மறுநாளைக்குள் அழைத்துக் கொண்டு போய்விடலாம் என்று எண்ணி இருந்த எண்ணத்தில் கடவுள் மண்ணைப் போட்டுவிட்டதையும் கண்டு மோகனரங்கன் மகா வேதனையான நிலைமையிலிருந்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/135&oldid=645877" இலிருந்து மீள்விக்கப்பட்டது