பக்கம்:மதன கல்யாணி-2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மதன கல்யாணி

தயாராக இருக்கிறேன் என்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். நாளைக்கு சரியாக ஒரு மணிக்கு உங்களுடைய வருகையை எதிர் பார்த்திருப்பேன்” என்றான். செட்டியார், “அவசியம் வருகிறேன். தவறவே மாட்டேன்” என்று அழுத்தமாகக் கூறினார்.

அதற்குள் ஸாரட்டு வண்டி கோமளேசுவரன் பேட்டை சுந்தர விலாசத்தின் வாசலில் வந்து நின்றது. உடனே அவர்களது சம்பாஷணை முற்றுப்புள்ளி பெற்றது. செட்டியார் சாரதியை நோக்கி, “அடே கதவைத் தட்டி, வேலைக்காரர்களில் நாலு பேரை அழைத்து ஒரு சாய்மான நாற்காலியையும் எடுத்துக் கொண்டுவா! என்றார். அந்த மனிதன் விரைவாக வாசற்படியில் ஏறிக் கதவைத் தட்ட, ஒரு வேலைக்காரன் வந்து கதவைத் திறந்தான். உடனே சாரதி விஷயத்தை இரண்டொரு வார்த்தையில் அவனிடத்தில் தெரிவிக்க, அவன் பெருத்த திகைப்பும் திகிலும் கொண்டவனாய் உள்ளே ஓடி, இன்னமும் மூன்று வேலைக்காரர் களையும் அழைத்துக் கொண்டு, சாய்மான நாற்காலியோடு வண்டிக்கருகில் வந்து சேர்ந்தான். உடனே மதனகோபாலன், மெதுவாகத் தூக்கி நாற்காலியில் சார்த்தப்பட்டான். நான்கு வேலைக்காரர்கள் அவனை நாற்காலியோடு தூக்கி மெல்ல வீட்டிற்குள் கொண்டு போயினர். செட்டியார், துரைராஜாவைப் பார்த்து, “சரி; உங்களுக்கு நான் நிரம்பவும் சிரமம் கொடுத்து விட்டேன். இந்த ஸாரட்டையே திரும்பவும் உங்களுடைய பங்களாவுக்கு இப்போது அனுப்புகிறேன். நீங்கள் இதிலேயே போங்கள் வேறு வாடகை வண்டி அமர்த்த நேரமில்லை” என்றார்.

உடனே துரைராஜா நன்றியறிதலினால் மலர்ந்து புன்னகை செய்த வதனத்தினனாய், “சரி, நிரம்ப சந்தோஷம். அப்படியே ஆகட்டும்; இந்த மனிதனை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; அந்த டாக்டரையே இரண்டு வேளைகளிலும் வரச் செய்து மருந்து போடச் சொல்லுங்கள். இவ்வளவு துன்பங்களும் என்னால் ஏற்பட்டன. மதனகோபாலனை நாற்காலியிலிருந்து எடுத்துப் படுக்கையில் விடப் போகிறார்கள் அல்லவா?” என்றான்.

செட்டியார், “ஆம்; படுக்கையிலே தான் விட்டு வைக்க வேண்டும்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/152&oldid=645904" இலிருந்து மீள்விக்கப்பட்டது